பி.எஸ்.சி. செவிலியர் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஆக. 17) முதல் தொடங்க உள்ளது.
பி.எஸ்.சி செவிலியர், இயன்முறை மருத்துவம் (பிஸியோதெரபி), பி.எஸ்.சி. ரேடியாலஜி, பி.எஸ்.சி. ரேடியோதெரபி டெக்னாலஜி, கார்டியோ பல்மனரி பெர்பூஷன் டெக்னாலஜி, பி.எஸ்சி. ஆப்தோமெட்ரி உள்ளிட்ட படிப்புகளுக்கு கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் ஒவ்வொரு நாளும் காலை 9 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும்.
முதல்நாளான திங்கள்கிழமை மாற்றுத்திறனாளி மாணவர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு ஆகியோருக்கு கலந்தாய்வு நடைபெறும்.
ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை பொதுப்பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.
கலந்தாய்வில் பங்கேற்பவர்கள் “செயலர், தேர்வுக் குழு’ என்ற பெயரில் ரூ. 200-க்கு வரைவோலையை சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட நாளில் கலந்தாய்வில் பங்கேற்காத மாணவர்கள் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க முடியாது.
கலந்தாய்வில் பங்கேற்பதற்கான அழைப்புக் கடிதம் மாணவர்களுக்கு தனித்தனியாக அனுப்பப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள் www.tnhealth.org, www.tn.gov.in ஆகிய இணையதளங்களில் அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.