விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. கோவிந்தா, கோபாலா என்ற கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இக்கோயில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா ஆக., 8ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் பகலில் ஆண்டாள், ரெங்கமன்னார் மண்டபங்களில் எழுந்தருளினர். இரவில் வாகன புறப்பாடும் நடந்தது. நேற்று முன்தினம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில், மதுரை அழகர்கோவிலில் இருந்து சீர் கொண்டு வரப்பட்டு ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சாத்தப்பட்டது. 9ம் நாளான நேற்று அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் தேரில் எழுந்தருளினர். அங்கு அனந்தராமன், சுதர்சன் பட்டர்கள் வேதபாராயணம் பாடினர். ரகு பட்டர், விஜயபாஸ்கர பட்டர் சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்தனர். காலை 8.05 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அமைச்சர்கள் காமராஜ், ராஜேந்திர பாலாஜி, கோகுல இந்திரா, எம்பி.,க்கள் வசந்தி முருகேசன், ராதாகிருஷ்ணன், ஸ்ரீவில்லிபுத்துார் எம்.எல்.ஏ., பொன்னுபாண்டியன், அறநிலையத்துறை கமிஷனர் வீரசண்முக மணி, விருதுநகர் கலெக்டர் ராஜாராமன், அபய்குமார் சிங் ஐ.ஜி., ஆனந்தகுமார் சோமானி டி.ஐ.ஜி., துவக்கி வைத்தனர்.
கோவிந்தா, கோபாலா என்ற கோஷத்துடன் ஏராளமானோர் வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்களின் வெள்ளத்தின் நடுவே நான்குரதவீதிகளைச் சுற்றி அசைந்து ஆடி வந்த தேர், காலை 10.45 மணிக்கு நிலை சேர்ந்தது. இதன்பின் பக்தர்கள் தேரில் ஏறி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணைஆணையர் செல்வராஜ், தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி ராமராஜா செய்தனர். விருதுநகர் மகேஷ்வரன் எஸ்.பி., தலைமையில் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.