உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்ற சாய்னா நேவலுக்கு பிரதமர் பாராட்டு
இந்தோனேஷியாவில் நடைபெற்ற 22-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் வெள்ளிப்பதக்கம் பெற்று சரித்திர சாதனை பெற்றார். அவர் நடப்பு சாம்பியன் கரோலினா மரினிடம் தோல்வி அடைந்தாலும் இந்திய வீரர் ஒருவர் உலக சாம்பியஷிப் போட்டியில் வெள்ளி வெல்வது இதுவே முதல்முறையாகும்.
இதற்கு முன்பு இந்திய வீரர் பிரகாஷ் படுகோனே (1983), வீராங்கனைகள் ஜூவாலா கட்டா-அஸ்வினி பொன்னப்பா ஜோடி (2011), பி.வி.சிந்து (2013, 2014) ஆகியோர் வெண்கலப்பதக்கம் மட்டுமே வென்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்த சாய்னா நேவாலுக்கு, பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய டுவிட்டரில் விடுத்துள்ள வாழ்த்து செய்தி ஒன்றில் கூறியிருப்பதாவது, ‘உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வெல்வது என்பது அரிய சாதனையாகும். அவரது சாதனை நிச்சயம் எல்லோருக்கும் உத்வேகம் அளிக்கும். சாய்னாவுக்கு வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார்.