துணிச்சல் இல்லாதவர் பிரதமர் மோடி. ராகுல்காந்தி குற்றச்சாட்டு
“பிரதமர் நரேந்திர மோடி வெற்று பேச்சு பேசுவதில் மட்டுமே வீரராக உள்ளார். அவர் கொடுத்த வாக்குறுதிகளான கருப்பு பணம் மீட்பு உட்பட பல விஷயங்கள் குறித்து ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்கும் துணிச்சல் அவருக்கு இல்லை” என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆவேசமாக கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான அமேதியில் தற்போது சுற்றுப்பயணம் செய்து வரும் ராகுல் காந்தி நேற்று தகியவான் என்ற கிராம மக்களை ராகுல் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் கிராம மக்கள் மத்தியில் பேசியதாவது:
நாடாளுமன்ற தேர்தலின் போது பிரச்சாரம் செய்த மோடி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால், வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கருப்பு பணத்தை மீட்டு வருவோம், ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வாம் என்று வீராப்பாக பேசினார் ஆனால் அதன்படி உங்களுக்கு ரூ.15 லட்சம் பணம் வந்து விட்டதா? எந்தப் பணமும் இதுவரை வரவில்லை. இனிமேலும் வரப்போவதில்லை.
3
மோடி வெறுமனே பேசி வருகிறார். தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் துணிச்சல் அவருக்கு இல்லை. ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி மீதான ஊழல் பற்றி நான் பேசி வருகிறேன். அதற்கு பதில் அளிக்காமல் பிரதமர் மோடி மவுனம் சாதித்து வருகிறார்.
இவ்வாறு ராகுல் பேசினார்.
பின்னர் ராம்நகர், திகாரி, கல்யாண்பூர், பிபார்பூர், அயோத்தியா நகர் மற்றும் பதார் கிராமங்களுக்கு ராகுல் சென்றார். அங்குள்ள காங்கிரஸ் தொண்டர்கள் அவரை வரவேற்றனர். பின்னர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் ராகுல். முன்னதாக உ.பி. காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். வரும் 2017-ம் ஆண்டு உ.பி.யில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றி ராகுல் ஆலோசனை நடத்தியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.