லலித்மோடியின் சதியால்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடையா? வைகோவின் அதிர்ச்சி குற்றச்சாட்டு

லலித்மோடியின் சதியால்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடையா? வைகோவின் அதிர்ச்சி குற்றச்சாட்டு

vaikoசமீபத்தில் ஐ.பி.எல் போட்டியில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விதிக்கப்பட்ட தடைக்கு லலித் மோடியின் சதித் திட்டமே காரணம் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில், ”ஒலிம்பிக் உள்ளிட்ட உலகப் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டு இடம் பெறாவிடினும் காமன்வெல்த் நாடுகளில் மிகவும் பிரசித்தமான விளையாட்டாகும். இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் கிரிக்கெட் விளையாட்டுக்கு வீரர்களும், ரசிகர்களும் ஏராளமாக மாணவர்களும், இளைஞர்களும் உள்ளனர். காமன்வெல்த் நாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் பலமுறை இந்தியா சாம்பியனாக வெற்றி பெற்று வந்திருக்கிறது.

இந்நிலையில் இந்தியாவில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் முக்கியத்துவம் பெற்றன. ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் பலமுறை சாம்பியனாக வெற்றி பெற்று இந்தியாவில் மிகவும் பிரபலம் அடைந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது சொல்லப்பட்ட சில குற்றச்சாட்டுகளால், ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாண்டு காலத்துக்குப் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் தனியார் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு நாட்களாக வெளியாகி உள்ள செய்திகள், பி.சி.சி.ஐ. முன்னாள் தலைவர் லலித் மோடி தமிழ்நாட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக வகுத்த சதித்திட்டம் அம்பலத்துக்கு வந்துள்ளது.

2014 மார்ச் 18 ஆம் தேதி லலித்மோடி, வழக்கறிஞர் ஹரிஷ் சால்வேக்கு எழுதியுள்ள மின்னஞ்சல் கடிதத்தில் தமிழர்கள் குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். பீகார் கிரிக்கெட் சங்கத்தை பின்னணியில் இருந்து லலித்மோடி இயக்கியுள்ளார். பி.சி.சி.ஐ. தலைவராக இருந்தபோது, பதவியைத் தவறாகப் பயன்படுத்தி செய்த ஊழல்கள் வெளிவந்த நிலையில், இந்தியாவை விட்டு தப்பிச் சென்றார்.

இந்திய அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியின் மத்திய, மாநில அமைச்சர்கள் லலித்மோடிக்கு சட்டவிரோதமாக உதவிய பிரச்னை இந்திய நாடாளுமன்றத்தையும், இந்திய அரசியலையும் உலுக்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் பி.சி.சி.ஐ.யின் முன்னாள் தலைவர்களாக இருந்தவர்கள் மீதும் லலித்மோடி சில அபாண்டமான குற்றச்சாட்டுகளையும் கூறிதால், இந்திய கிரிக்கெட் விளையாட்டுக்கே அவப்பெயர் ஏற்பட்டது.

அனைத்துலக நாடுகளில் கிரிக்கெட் அமைப்புக்கே தலைவராக முதன் முதலாக ஒரு தமிழர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதை சகித்துக்கொள்ள முடியாத லலித்மோடியின் சதித் திட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாண்டு காலத்துக்கு தடை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தனியார் தொலைக்காட்சி ஆவணங்களால் ஏற்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது கூறப்பட்ட புகார்களின் உண்மையை விரைவாகக் கண்டறிந்து, குற்றம் இருந்தால் அதன்பின்னர் தடை விதிக்கலாம். கிரிக்கெட் போட்டிகளில் தமிழ்நாட்டுக்கு பெருமை தேடித் தந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும், கிரிக்கெட் விளையாட்டையும் நசுக்கி விடாமல், பாதுகாக்கும் நடவடிக்கைகளை கிரிக்கெட் துறையைச் சேர்ந்தவர்கள் மேற்கொள்ள வேண்டுகிறேன்” என்று கூறி உள்ளார்.

Leave a Reply