கொடும்பாவி கொளுத்தும்போது காயம். மருந்து போட்டுவிட்ட பெண் போலீஸ்

கொடும்பாவி கொளுத்தும்போது காயம். மருந்து போட்டுவிட்ட பெண் போலீஸ்

thanjavur protest(1) thanjavur protest 1 policeபிரதமர் நரேந்திரமோடி மற்றும் முதல்வர் ஜெயலலிதாவின் சந்திப்பு குறித்து கொச்சைப்படுத்தி பேசியதாக தமிழகம் முழுவதும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. அவருடைய உருவ பொம்மையை தமிழகத்தின் பல பகுதிகள் எரித்து தங்கள் எதிர்ப்பை அதிமுக மற்றும் பாஜக தொண்டர்கள் காட்டி வருகின்றனர். இந்நிலையில்  நேற்று  தஞ்சாவூரில் பா.ஜனதா கட்சியினர், ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் உருவ பொம்மையை கொளுத்தியபோது எதிர்பாராமல் ஒரு வயதான தொண்டருக்கு தீக்காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்த பெண் காவலர் ஒருவர் அந்த தொண்டருக்கு முதலுதவி செய்தார். இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

நேற்று மாலை 6 மணியளவில், தஞ்சாவூர் ரயில்  நிலையம் அருகே பா.ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டத்தில் தஞ்சாவூர் நகர தலைவரான விநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில், இளங்கோவனின் உருவப்படம் நடுவீதியில் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. அப்போது, ஒரு தொண்டர் தனது கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக, ’எரியும் உருவ பொம்மையில் பெட்ரோலை ஊற்றினார். இதனால் சாலை நடுவே தீ பற்றி எரிந்ததோடு, அங்கிருந்த கட்சித் தொண்டர்கள் மற்றும் காவல்துறையினர் மீதும் தீ பிடித்தது. இதனால் அந்த இடமே பெரும் பரபரப்புக்குள்ளானது.

உடனே காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். மேலும் தீக்காயம் அடைந்தவர்களுக்கு, முதலுதவி ஏற்பாடுகளையும் காவல்துறையினர் செய்தனர். சிவகாசியிலிருந்து வந்திருந்த வயதான தொண்டர் ஒருவரின் கையில் தீக்காயம் ஏற்பட்டது. அவரின் கையில் ஏற்பட்ட காயங்களுக்கு பெண் காவலர் ஒருவர் மருந்து தடவி முதலுதவி செய்தார்.
 
தன் காயங்களையும் பொருட்படுத்தாமல், போராட்டக் களத்தில் காயம் அடைந்தவர்களுக்கு பெண் காவலர்கள் உடனடியாக மருத்துவ முதலுதவி செய்தது, அவர்கள் மீதிருந்த மரியாதையை மேலும் ஒருபடி உயர்த்தி இருக்கிறது என்றனர் சம்பவத்தை நேரில் கண்டவர்கள்.

Leave a Reply