ஆந்திர முதல்வரின் ரூ.5 கோடி மதிப்பு பேருந்து. பொதுமக்கள் அதிருப்தி
ஆந்திரபிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் பாதுகாப்பு கருதி அதிநவீன வசதிகளுடன் கூடிய ரூ.5.5 கோடி மதிப்பில் குண்டு துளைக்காத பஸ் ஒன்றை ஆந்திரா அரசு வாங்கியிருப்பது அந்த மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் முதல்வர் சந்திரபாபு நாயுடு என பேசப்பட்டு வரும் நிலையில் அவருடைய பாதுகாப்பிற்கு இவ்வளவு அதிகமான தொகையில் ஒரு பஸ் வாங்கியிருப்பது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கடந்த 2003ஆம் ஆண்டு சந்திரபாபு நாயுடு திருப்பதி செல்லும் வழியில் நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதைத் தொடர்ந்து அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவின் பாதுகாப்புக்கு நவீன வசதிகளுடன் கூடிய குண்டு துளைக்காத பேருந்து ஒன்றை, 5.5 கோடி ரூபாய்க்கு ஆந்திர அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவு செய்து அதை தற்போது வாங்கியுள்ளது.
கரடுமுரடான சாலையிலும் சொகுசாக செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்தில் குளியல் அறை, கழிவறை, டைனிங் ஹால், மீட்டிங் ஹால் மற்றும் இன்டர்நெட், வை-பை, கம்ப்யூட்டர் வசதிகள் உள்ளது.
மாதம் ஒரு மாவட்டத்துக்கு சுற்றுப்பயணம் செய்து மக்களின் குறைகளை கேட்டு வரும் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்காக, இத்தனை கோடி ரூபாய் செலவில் குண்டு துளைக்காத சொகுசு பேருந்தை மாநில அரசு போக்குவரத்து துறை வாங்கியிருக்கிறது. சண்டிகரில் உள்ள ஜே.சி.டி.சி. நிறுவனம் இந்த பேருந்தை வடிவமைத்து உள்ளது.
துப்பாக்கி சூட்டிலும், குண்டு வெடிப்பிலும் சேதம் அடையாத வகையில் பேருந்து வடிவமைக்கப்பட்டு உள்ளது. பேருந்தில் அமைக்கப்பட்டுள்ள கேமரா மூலம் வெளியே நடக்கும் நிகழ்ச்சிகளை பேருந்துக்குள் இருக்கும் டி.வி. திரையில் பார்க்கும் வசதியும் உள்ளது. வெளியில் உள்ளவர்கள் பேசுவதை தெளிவாக கேட்கும் வகையில் ஸ்பீக்கரும் உள்ளது. பேருந்து டிரைவருக்கு சாலையின் பாதைகள் தெள்ளத்தெளிவாக தெரிய வசதி செய்யப்பட்டு உள்ளது. இந்த பேருந்தில் 9 பேர் பயணம் செய்யலாம். குக்கிராமங்களுக்கு செல்லும் சந்திரபாபு நாயுடு, இரவில் இந்த பேருந்திலேயே ஓய்வு எடுத்துக்கொள்வார் என தெரிகிறது.
தற்போது, விஜயவாடாவில் உள்ள முதல்வர் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்ட இந்த பேருந்தை சந்திரபாபு நாயுடு பார்வையிட்டதோடு, பேருந்தின் உள் அலங்காரத்தில் சில மாற்றங்களை செய்ய உத்தரவிட்டுள்ளார்.