ஸ்டேட் பேங்க்கை எதிர்த்து வழக்கு போட்டு வெற்றி பெற்ற 5வது மட்டுமே படித்த டீக்கடைக்காரர்
சாதாரண டீக்கடை வைத்திருந்தவர் இந்தியாவின் பிரதமர் ஆனதை போன்று மத்திய பிரதேச மாநிலத்தில் டீக்கடை வைத்திருந்த ஒருவர் வழக்கறிஞராக மாறி தன்னுடைய வழக்கை தானே நடத்தி வெற்றி பெற்றுள்ளார். அதுவும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவை எதிர்த்து என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் டீக்க்டை வைத்திருந்த ராஜேஷ் சக்ரே என்பவர் தனது கடைக்கு அருகில் இருந்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்திருந்தார். கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி அன்று ராஜேஷ் சக்ரே தனது எஸ்.பி.ஐ. வங்கியின் கணக்கில் இருந்து ரூ.10,800 எடுத்திருக்கிறார். மீதி ரூ.9,200 இருந்திருக்க வேண்டிய நிலையில், அடுத்த நாள் அவர் தனது வங்கிக்கணக்கை சரிபார்த்தபோது, அதில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் போனதை பார்த்த பேரதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து வங்கி அலுவலர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும் பயன் இல்லாததால் கடைசியாக அவர் மாவட்ட நுகர்வோர் வழக்கு தீர்க்கும் மையத்தில் புகார் செய்தார். வெறும் ஐந்தாவது படித்த டீக்கடைக்காரரான ராஜேஷ், வழக்கறிஞர் போல் மாறி நீதிமன்றத்தில் தனக்காக தானே வாதாடினார்.
ஸ்டேட் பாங்க் தனது சார்பில் திறமையான வழக்கறிஞர்களை வைத்து வாதாடி வந்தது. ஆனால், அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுத்து ராஜேஷ் சக்ரே, தனது உரிமைகளுக்காக தொடர்ந்து போராடினார்.
அதற்கான வெற்றி தற்போது கிடைத்திருக்கிறது. இந்த வருடம் ஜூன் மாதம் 16ஆம் தேதி இந்த வழக்கில் ராஜேஷுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வாரம் எஸ்.பி.ஐ. வங்கி 6% வட்டியுடன் அந்த 9200 ரூபாயை திருப்பி அளித்தது. அது மட்டுமல்லாமல் அவரை கஷ்டப்படுத்தியதற்கு நிவாரணமாக 10,000 ரூபாயும், வழக்கின் செலவிற்காக 2000 ரூபாயும் வழங்கியது.
தனி ஒரு மனிதன் நினைத்தால்கூட மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வர முடியும் என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு.