ஆண்களை மட்டுமே இதய நோய்கள் பாதிக்கும் என்ற கருத்து பொதுவாக மக்களிடம் மட்டுமன்றி மருத்துவர்களிடையேயும் நீண்ட காலமாக நிலவி வந்தது. ஆனால் சமீபகாலமாகத்தான் இந்தக் கருத்து மாறியிருக்கிறது.
பெண்களுக்கு இதய நோய்கள் ஏற்படாது என்ற கருத்து உருவானதற்குச் சமூக ரீதியாகவும் காரணங்கள் இருக்கின்றன. பெண்கள் என்றால் மென்மையான இயல்புடையவர்கள் என்ற சமுதாயப் பார்வை இருந்தது. இதன் காரணமாக கடினமான உழைப்புக்கு ஆண்களும், மென்மையான வேலைகளுக்குப் பெண்களும் நியமிக்கப்பட்டார்கள்.
இதனால் மென்மையான வேலைகளைச் செய்யும் பெண்கள் இதய நோய்க்கு ஆளாக வாய்ப்பில்லை என்ற தவறான கருத்து நிலவி வந்தது. இத்தகைய தவறான கருத்துக்கு ஆதரவு தரும் விதமாக ஒரு மருத்துவ ஆராய்ச்சியின் முடிவும் அமைந்துவிட்டது.
1950&ம் ஆண்டுகளில் இதய நோய்களைப் பற்றி நீண்ட காலமாக ஒரு மிகப்பெரிய ஆய்வு நடத்தப்பட்டது. இது பர்மிங்ஹாம் ஆய்வு என்று சொல்லப்படுகிறது. இந்த ஆய்வு ஆண்களை மட்டுமே இதய நோய்கள் பாதிக்கும் என்றும் பெண்கள் இயற்கையாகவே இதய நோய்களில் இருந்து பாதுகாப்பு பெற்றுள்ளனர் என்றும் இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் வெளிப்படுத்தின.
இதை உண்மையென்றே உலகில் உள்ள மருத்துவர்கள் நீண்ட காலமாகக் கருதி வந்தனர். ஆனால் காலப்போக்கில் பெண்களின் வாழ்க்கைத் தரத்திலும் சமூக அளவிலும் ஏற்பட்ட மாற்றங்கள் இந்த கருத்துகளையும் தகர்த்து எறிந்துவிட்டன.
இன்றைக்குப் பெண்கள் கடுமையான உடல் உழைப்பைத் தரக்கூடிய எல்லாவகையான வேலைகளையும் செய்கிறார்கள். எனவே பெண்களுக்கு இதய நோய்கள் ஏற்படாது என்ற பழைய கொள்கை தகர்க்கப்பட்டுவிட்டது. ஆண்களைப்போலவே எல்லாவிதமான வேலைகளிலும் பெண்கள் ஈடுபடுவதால் அவர்களும் இதய நோய்களால் பாதிக்கப்படுவார்கள் என்பதை அனைவரும் இன்றைக்கு உணர்ந்திருக்கின்றனர்.
அதோடு ரத்தமிகு அழுத்த நோய் இதயத் தமனி நோய்கள் ஆகியவற்றால் பெண்களும் பரவலாகப் பாதிக்கப்படுவதை மருத்துவ உலகமும் உணர்ந்து கொண்டது. ஆனால் இதய நோய்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும் வகையில் பெண்களின் உடலில் ஒரு விசேஷ அம்சம் உள்ளது. பெண்கள் பருவமடைந்த காலத்தில் இருந்து மாதவிலக்கு முற்றுப் பெறுவதுவரை உள்ள இடைப்பட்ட காலத்தில் பெண்களின் உடலில் பெண் இள ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் தொடர்ந்து சுரக்கிறது.
பெண்மை தொடர்புடைய பலவகையான நிகழ்வுக்குக் காரணமான இந்த ஹார்மோன், பெண்களை இதய நோய்களில் இருந்து காக்கும் ஆற்றல் பெற்றுள்ளது. இந்தப் பாதுகாப்பானது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரக்கும் காலகட்டத்தில்தான் கிடைக்கிறது. சுரக்க முழுமையாக நின்ற பிறகு பாதுகாப்பு கிடைப்பதில்லை.
பெண்களுக்கு மாரடைப்பு வராது என்ற தவறான கருத்தும் இன்றைக்கு மாறியிருக்கிறது. மாரடைப்பு ஆண்களை இளமைப் பருவத்திலும் பெண்களை நடுத்தர வயதிலும் பாதிக்கிறது. மாதவிலக்கு முற்றுப்பெற்ற பெண்கள். ஆண்களுக்கு இணையாக மாரடைப்புக்கு ஆளாக வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.
குழந்தை பெறும் பருவ காலங்களில் இதய நோய்களில் இருந்து இயற்கையான பாதுகாப்பு கிடைத்தாலும் உலக அளவில் இதய நோய்களுக்கு ஆளாகி இறக்கும் பெண்களின் எண்ணிக்கையானது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாகப் பல புள்ளிவிவரங்களை கூறுகின்றன.
மற்றவகை நோய்களைவிட இதய நோய்களால் இறக்கும் பெண்களின் குறிப்பாக 65 வயதுக்கு உள்பட்ட பெண்களின் எண்ணிக்கையானது அதிகமாக உள்ளது. பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஓரளவு பாதுகாப்பு அளித்தாலும் இளம் வயதில், நடுத்தர வயதில், குழந்தை பெறும் பருவ காலங்களில், மாரடைப்புக்கு ஆளாகி இறக்கும் பெண்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
பெண்களின் வாழ்க்கை நிலையும், சமூக நிலையும் பெருமளவு மாறியிருப்பதே இதற்குக் காரணம். கடுமையான உடல் உழைப்பு தேவைப்படும் வேலைகளில் பெண்கள் தற்போது அதிக அளவு ஈடுபட்டு வருகின்றனர். தற்காலப் பெண்கள் நம்முடைய பாரம்பரியமான உணவு பழக்க வழக்கங்களை மறந்து மேலை நாட்டு உணவு வகைகளை அதிக அளவு சாப்பிட ஆரம்பித்திருக்கிறார்கள்.
அன்றாட உணவில் அளவுக்கு அதிகமாக கொழுப்பு உணவு வகைகளையும், இனிப்பு வகை உணவுகளையும், உப்பு வகைகளையும் சேர்த்துக் கொள்கிறார்கள். உடலின் எடையை ஒரே சீராக வைத்துக் கொள்ளாமல் இடைப்பெருக்கம், உடல் பருமன் ஆகியவற்றுக்கு ஆளாதும் ஒரு முக்கியக் காரணம். அன்றாட வாழ்க்கையில் பலவகையான மன இறுக்கத்துக்கும், மன உளைச்சலுக்கும் அடிக்கடி ஆளாதல், வேலைக்குச் செல்லும் பெண்கள் குடும்பச் சுமை மற்றும் அலுவலகப் பணிச்சுமையை ஒருசேர சுமத்தல் நீரழிவு நோயால் பாதிக்கப்படுதல் போன்ற காரணங்களாலும் பெண்கள் இதய நோய்களுக்கு ஆளாகின்றனர்.
தற்காப்பு முறைகள் வயது, உயரம் ஆகியவற்றுக்கு ஏற்றவாறு உங்கள் எடையை ஒரே சீராக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் ரத்த அழுத்தத்தின் அளவை அவ்வப்போது சோதித்துக் கொள்ளுங்கள். குறிப்பிட்ட அளவைவிட அதிகமாக இருந்தால் தக்க மருந்துகள், தக்க உணவு முறைகள் மூலமாகக் கட்டுப்படுத்துங்கள்.
30 வயதைக் கமந்த பெண்கள், ஆண்டுக்கு ஒருமுறையாவது தங்களுடைய ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ராலின் அளவைச் சோதித்துக் கொள்ளுங்கள். அளவு அதிகமாக இருந்தால் அதற்கேற்ப தக்க மருந்துகள் மூலம் தொடக்க நிலையிலேயே அவற்றைக் கட்டுப்படுத்துவது நல்லது.
உடலுக்கு எந்தவித இயக்கமும் கொடுக்காமல் இருந்தாலும் இதய நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புக்ள் அதிகரித்துவிடும். எனவே அன்றாடம் உங்கள் வயதுக்கு ஏற்ப, நடைப்பயிற்சி, மெல்லோட்டம், சைக்கிள் பயிற்சி போன்ற ஏதாவது ஒன்றில் அரைமணி நேரம் ஈடுபடுங்கள்.
மன இறுக்கம், மன உளைச்சல் போன்றவை இதயப் பாதிப்புக்கு வழிவகுக்கும் முக்கியக் காரணங்களில் ஒன்றாகும்.
இதைப்போக்க மனத்துக்கு மகிழ்ச்சியூட்டும். நல்ல பொழுதுபோக்குகளை தேர்ந்தெடுத்து குறிப்பிட்ட நேரத்தை அவற்றுக்காக ஒதுக்குங்கள்