சதுரகிரி மலைக்கோயில் ஆடி அமாவாசை விழாவை யொட்டி, 11 நாளில் பக்தர்களின் காணிக்கையாக 34 லட்சம் ரூபாய் வசூலானது. சதுரகிரி மலை கோயிலில் கடந்த ஆக.,8 முதல் 18 வரை ஆடி அமாவாசை விழா நடந்தது. இதையொட்டி, 11 நாட்கள் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 18 ம் தேதி மாலையுடன் மலைப்பாதை மூடப்பட்டது. விழாவை தொடர்ந்து, கோயில் உண்டியல்களைத் திறந்து எண்ணும் பணி, அறநிலைய உதவி ஆணையாளர் இளையராஜா, ஆய்வாளர் பாலலட்சுமி, கோயில் நிர்வாக அதிகாரி குருஜோதி முன்னிலையில் கடந்த இரு நாட்களாக நடந்தது. சந்தனமகா லிங்க சுவாமி கோயிலில் ரூ.3 லட்சம் , சுந்தர மகாலிங்க சுவாமி கோயிலில் ரூ.30 லட்சம் காணிக்கையாக கிடைத்தது. மேலும் ரூ.ஒரு லட்சம் மதிப்புள்ள தங்கம்,வெள்ளி உள்ளிட்ட காணிக்கை பொருட்களும் கிடைத்தன. காணிக்கை பணம், பொருள்கள் டோலி மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தாணிப்பாறை மலையடிவாரத்திற்கு கொண்டு வரப்பட்டது.