விஷால் அணிக்கு முதல் தோல்வி. சரத்குமார் அணி உற்சாகம்
விரைவில் நடைபெற உள்ள தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கு சரத்குமார் மற்றும் விஷால் அணிகள் விறுவிறுப்பாக வாக்கு வேட்டை நடத்தி வரும் நிலையில் சமீபத்தில் நடைபெற்ற சேலம் நாடக நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணியினர் தோல்வி அடைந்தனர். இந்த தேர்தலில் ராதாரவி- சரத்குமார் அணியில் சார்பில் போட்டியிட்ட அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர்.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் சேலம் மாவட்ட நாடக நடிகர்கள் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் நேற்று காலை நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போதைய தலைவரான அத்தியப்பன் மீண்டும் தலைவராக ஒருமனதாக தேர்வாகியுள்ளார்.
பொருளாளர்,செயலாளர் மற்றும் செயற்குழு உள்ளிட்ட பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது. சேலம் நாடக நடிகர் சங்க செயலாளர் பதவிக்கு நடிகர் ராதாரவியின் ஆதரவாளரான சேலம் மாநகராட்சி மேயர் சவுண்டப்பன் மீண்டும் போட்டியிட்டார். இவரை எதிர்த்து விஷால் தரப்பில் இருந்து ரகுபதி போட்டியிட்டார்.
இந்த தேர்தலில் சவுண்டப்பன் 130 ஓட்டுகளையும், ரகுபதி 74 ஓட்டுகளையும் பெற்றனர். இதனால் சவுண்டப்பன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் துணைத் தலைவராக கண்ணன் என்பவரும் துணைச் செயலாளராக முத்துகிருஷ்ணன் என்பவரும் பொருளாளராக சக்தி வேல் என்பவரும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற அனைவருமே ராதாரவி-சரத்குமார் அணியினர் என்பது குறிப்பிடத்தக்கது.
செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சேலம் மேயர் சவுண்டப்பன் தனது வெற்றி குறித்து கூறுகையில், ” கடந்த 40 வருடங்களாக இதில் நான் உறுப்பினராக இருக்கிறேன். எங்களுக்குள் எந்த பிரிவும் இல்லை. ஒரு பிரிவினர்தான் தங்களை விஷால் அணியினர் என்று கூறிக் கொண்டு தேர்தலில் போட்டியிட்டனர். இப்போது அவர்கள்தான் தோல்வியை சந்தித்துள்ளனர் என்று கூறினார்.