சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. மீண்டும் முதல்வரான ஜெயலலிதாவுக்கு சபாநாயகர் வாழ்த்து
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை ஆன பின்னர் மீண்டும் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற பின்னர் முதல்முறையாக இன்று சட்டப்பேரவை கூடியது. மீண்டும் முதல்வரான முதல்வர் ஜெயலலிதாவுக்கு சபாநாயகர் வாழ்த்து கூறினார். முன்னதாக ஜெயலலிதாவை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்ற வளாகத்தில் ஜெயலலிதாவுக்கு சிறப்பான வரவேற்பை அளித்தார்.
இன்றைய முதல் நாள் சட்டப்பேரவை மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், சமீபத்தில் இறந்த முன்னாள் அமைச்சரும், கடையநல்லூர் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவுமான செந்தூர் பாண்டியன் மற்றும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகிய மூவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல், மறைந்து முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து குறிப்பு வாசிக்கப்பட்டது. பின்னர் அவையில் 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனையடுத்து அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்த மாதம் 29ஆம் தேதி வரை நடைபெறும் என என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுவிலக்கு, குடிநீர் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால் இந்த கூட்டத்தொடர் காரசாரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கவுள்ளது.
ஆகஸ்ட் 28 (ஓணம் பண்டிகை), செப்டம்பர் 17 (விநாயகர் சதுர்த்தி), 24 (பக்ரீத்) என அரசு விடு முறை தினங்களிலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பேரவைக் கூட்டம் இல்லை. இது தவிர, உலக முதலீட்டாளர்கள் மாநாடு செப்டம்பர் 9,10 தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடக்கிறது. இதையொட்டி, செப்டம்பர் 7 முதல் 11-ம் தேதி வரை பேரவைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்கள் தவிர்த்து மொத்தம் 19 நாட்கள் பேரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.