ஜெயலலிதாவை விடுதலை செய்த நீதிபதி குமாரசாமி ஓய்வு

ஜெயலலிதாவை விடுதலை செய்த நீதிபதி குமாரசாமி ஓய்வு

kumarasamyதமிழக முதல்வர் ஜெயலலிதாவை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி இன்று ஓய்வு பெற்றார். அவருக்கு எளிமயான முறையில் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவர் அந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி குமாரசாமி விசாரணை செய்தார். இந்த வழக்கில் கடந்த மே 11 ஆம் தேதி வழங்கப்பட்ட பரபரப்பான தீர்ப்பில், ஜெயலலிதாவை விடுதலை செய்து நீதிபதி குமாரசாமி உத்தரவிட்டார். ஆனால் அவர் அளித்த தீர்ப்பில் கூட்டல் கழித்தல் கணக்குகள் குறித்து கடும் சர்ச்சைகள் எழுந்தன.

இந்த தீர்ப்புக்கு பின்னர் தனது வழக்கமான பணிகளை கவனித்து வந்த குமாரசாமி, இன்று பணியிலிருந்து ஓய்வு பெற்றார். பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் உள்ள 1வது எண் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரிவு உபச்சார விழா எளிமையான முறையில் நடைபெற்றது.

விழாவுக்கு கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுப்ரோ கமல் முகர்ஜி தலைமை வகித்தார். உயர் நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் விழாவில் கலந்து கொண்டனர். மதியம் 2 மணிக்கு தொடங்கிய இவ்விழா அரைமணி நேரத்திலேயே முடிவடைந்தது.

இந்த பிரிவு உபச்சார விழாவில் பேசிய நீதிபதி குமாரசாமி,” என்னுடன் பணியாற்றிய சக நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், உதவியாளர் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றுமட்டும் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

Leave a Reply