இந்தியாவின் பொருளாதாரம் நிலையாக உள்ளது. பங்குச்சந்தை வீழ்ச்சி குறித்து அருண்ஜெட்லி கருத்து
நேற்றைய பங்கு சந்தையின் வரலாறு காணாத திடீர் வீழ்ச்சி மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு ஆகியவை முதலீட்டாளர்களை அதிர வைத்துள்ளது. பங்கு சந்தையில் முதலீடு செய்வதில் உள்ள நம்பிக்கைத்தன்மை முதலீட்டாளர்களிடம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்த போதிலும் நமது பொருளாதாரம் நிலையாக உள்ளது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி செய்தியாளர்களிடம் கூறி உள்ளார்.
பங்கு சந்தையின் திடீர் வீழ்ச்சி பற்றி டெல்லியில் செய்தியாளர்கள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் கேள்வி கேட்டபோது அதற்கு அவர் கூறியதாவது: ”பங்கு சந்தையில் புள்ளிகள் வீழ்ச்சி அடைந்ததன் காரணமாக பங்குகளின் சந்தை மதிப்பு ஒரே நாளில் ரூ.7 லட்சம் கோடி சரிவடைந்தது. அதேபோல அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 66 ரூபாய் 64 காசுகளாக சரிவடைந்தது.
பிரதமர் நரேந்திர மோடி பங்கு சந்தை நிலவரம், இந்திய ரூபாயின் மதிப்பு ஆகிய நிலவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். நமது பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உலகளவில் ஏற்பட்டுள்ள இந்த பொருளாதார சிக்கலை இந்தியாவுக்கான ஒரு வாய்ப்பாக மாற்ற வேண்டும் என்றும் பிரதமர் கருத்து தெரிவித்து உள்ளார். நமது பொருளாதாரம் நிலையாக உள்ளது.
உலகளவில் வர்த்தகத்தில் இப்படி நிலையற்ற தன்மை ஏற்படுவது இயற்கையானது தான். அதனால், இப்போதுள்ள சூழ்நிலையை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள முதலீட்டாளர்கள் முன்வர வேண்டும். இதுதொடர்பாக தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையும் நடைபெற உள்ளது” என்று கூறினார்