மேல்முறையீடு செய்யும் அதிகாரம் கர்நாடக அரசுக்கு இல்லை. ஜெயலலிதா பதில் மனு

மேல்முறையீடு செய்யும் அதிகாரம் கர்நாடக அரசுக்கு இல்லை. ஜெயலலிதா பதில் மனு

jayalalithaசொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை கர்நாடக உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த வழக்கை விசாரணை செய்து தீர்ப்பு வழங்கியதோடு கர்நாடக அரசின் பணி முடிந்துவிட்டது. இந்த வழக்கை மேல்முறையீடு செய்யும் அதிகாரம் இந்த வழக்கை தொடுத்த தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மட்டுமே இருக்கிறது. எனவே கர்நாடக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஜெயலலிதாவின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், ஆர்.கே. அகர்வால் அடங்கிய‌ அமர்வு, நால்வரையும் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் தரப்பில் வழக்கறிஞர்கள் கோபாலகிருஷ்ணா, செந்தில், செல்வகுமார் ஆகியோர் நேற்று தலா 46 பக்கங்களைக் கொண்ட பதில் மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த மனுவில் கூறியிருப்பதாவது:, “சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் அதிகாரம் கர்நாடக அரசுக்கு இல்லை. இவ் வழக்கின் விசாரணை அமைப்பான தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மட்டுமே மேல்முறையீடு செய்யும் அதிகாரம் இருக்கிறது. கர்நாடக அரசுக்கு அரசு வழக்கறிஞரை நியமித்து, அம்மாநில எல்லைக்குள் வழக்கை நடத்தும் அதிகாரம் மட்டுமே இருக்கிறது.

எனவே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள கர்நாடக அரசின் மனு விசாரணைக்கு ஏற்புடையதா என்பதை முதலில் ஆராய வேண்டும். அதன் பிறகே வழக்கு விசாரணையை தொடங்க வேண்டும்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் 136-வது பிரிவின்படி, கர்நாடக அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதா தரப்பின் இந்த பதில் மனுவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply