சீனாவை இந்தியா முந்த இதுதான் சரியான வாய்ப்பு. சுப்பிரமணியன் சுவாமி
சீனாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, மற்றும் இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி ஆகியவை கடந்த இரண்டு நாட்களாக இந்திய பங்குச்சந்தையை ஆட்டிப்படைக்கின்றது. இதுவரை இல்லாத அளவிற்கு இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் புள்ளிகள் குறைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் பெரும் கவலை அடைந்து வருகின்றனர். இந்நிலையில் சீனாவின் இந்த பொருளாதார நெருக்கடியை இந்தியா புத்திசாலித்தனமாக பயன்படுத்திக்கொள்ள இதுவொரு நல்ல வாய்ப்பு என பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். ஆசிய நாடுகளில் முன்னணியில் இருக்கும் சீனா, உலக வல்லரசாக உருவெடுக்க வேண்டும் என்ற முயற்சியில் இருக்கும் நிலையில் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் அது தகர்ந்து போயுள்ளதாகவும், இந்த வாய்ப்பை இந்திய அரசியல் தலைவர்கள் புத்திசாலித்தனமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதுகுறித்து வாஷிங்டனில் சுப்பிரமணியன் சுவாமி அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:
சீனப் பொருளாதாரம் 2020-ஆம் ஆண்டில் முழுமையாகச் சீர்குலைந்துவிடும் என்று முன்பு கூறியிருந்தேன். ஆனால், அது ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே நடைபெற்றுள்ளதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதேவேளையில், இந்த நெருக்கடிக்கு உடனடியாக மருந்திட வேண்டுமென்றால், யுவான் கரன்ஸியை சர்வதேச செலாவணியாக முன்னிறுத்தும் அரசியலை சீனா கைவிட வேண்டும். சீனாவில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி ஒரு கட்டமைப்புத் தோல்வி எனக் கருதுகிறேன். அந்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரக் கட்டமைப்பிலும் சுயசார்புத்தன்மை கிடையாது.
தற்போது இந்தியா ஒரு பலமான வாய்ப்பைப் பெற்றுள்ளது. சீனா தனது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள சில காலம் பிடிக்கும். இந்தச் சூழலில், மிகச் சரியான நடவடிக்கைகளை எடுத்தோம் என்றால் சீனாவை நம்மால் முந்த முடியும். அமெரிக்கப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் தனது பொருளாதார ஆலோசகர்களை பிரதமர் நரேந்திர மோடி நீக்க வேண்டும். அதற்குப் பதிலாக, கட்சியில் தனக்கு சரியான ஆலோசனையைக் கூறும் தலைவர்களை அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும்.
வட்டி விகிதத்தை மத்திய அரசு 9 சதவீதமாகக் குறைக்க வேண்டும். அத்துடன் வருமான வரி விதிப்பை ரத்து செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த முடியும். துரதிருஷ்டவசமாக, நமது பொருளாதாரக் கட்டமைப்பை ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் சீர்குலைத்து வருகிறார். மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியும், ரகுராம் ராஜனும் எடுக்கும் சில நடவடிக்கைகளால், சீனப் பொருளாதார நெருக்கடியின் எதிர்விளைவுகள் இந்தியாவையும் பாதிக்கக் கூடும். சரியான நடவடிக்கைகளை எடுத்தால் அதைத் தவிர்க்கலாம்
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தனது பேட்டியில் கூறியுள்ளார்.