சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம்
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2-வது நாளான நேற்று திமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் தாங்கள் வெளிநடப்பு செய்வதாக அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் இதுகுறித்து கருத்து தெரிவித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், “சட்டப்பேரவையில், தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பினோம். திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஒத்திவைப்பு தீர்மானம் குறித்து விவாதிக்க அனுமதி கோரினோம். ஆனால் நாங்கள் பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. எங்களுக்கு அனுமதி கிடைக்காததால் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தோம்” என்று கூறினார்.
மு.க.ஸ்டாலினை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.எல்.ஏ. துரைமுருகன், “மதுவிலக்கு குறித்து மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் குறித்து விவாதிக்க அனுமதி கோரினோம் ஆனால், மானிய கோரிக்கை மீதான விவாதம் நடப்பதால் தீர்மானம் குறித்து விவாதிக்க முடியாது என தெரிவித்தனர். இது அவை மரபுக்கு மீறிய செயலாகும். எனவே, அவையிலிருந்து வெளிநடப்பு செய்தோம்” எனத் தெரிவித்தார்.