கோவில் சிலை திருட்டு வழக்கு: இயக்குனர் வீ.சேகரை அடுத்து 35வயது பெண் நிருபர் கைது.

கோவில் சிலை திருட்டு வழக்கு: இயக்குனர் வீ.சேகரை அடுத்து 35வயது பெண் நிருபர் கைது.
arrest
கோவில் சிலைகளை திருடி வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து கோடிக்கணக்கில் மோசடி செய்த கும்பலில் பிரபல திரைப்பட இயக்குனர் வி.சேகர் சமீபத்தில் கைது செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இதே சிலை திருட்டில் பெண் நிருபர் ஒருவரும் சம்பந்தப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்த தகவலை அடுத்து நேற்று அவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். பணத்திற்கு ஆசைப்பட்டு இந்த சிலைத்திருட்டில் சம்பந்தப்பட்டுவிட்டேன் என அவர் போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இவரது கைது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சிலைத்திருட்டு வழக்கில் 35 வயது பெண் நிருபர் மாலதி நேற்று தனிப்படையினர்களால் கைது செய்யப்பட்டார். அவர் போலீசாரிடம் மாலதி அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலத்தின் விபரம் பின்வருமாறு:

”எனது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ளது. 10வது வகுப்பு வரை படித்துள்ளேன். நான் சென்னை மயிலாப்பூரில் வாழ்கிறேன். எனக்கு திருமணமாகிவிட்டது. 2 குழந்தைகள் உள்ளனர். சிறிய பத்திரிகை ஒன்றில் நிருபராக பணியாற்றினேன். இந்த வழக்கில் போலீசார் என்னை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டு உள்ள அரசு அச்சக ஊழியர் கருணாகரன் எனது அண்ணன் ஆவார். எனது அண்ணன் மூலம், சிலை கடத்தல் மன்னன் ஜெயக்குமார் எனக்கு பழக்கமானார்.

சுபாஷ் கபூர் என்பவர் சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்திச் சென்று விற்று கோடீஸ்வரர் ஆனார் என்ற செய்தி பத்திரிகைகளில் வந்தது. அந்த செய்தியை பார்த்த ஜெயக்குமார் நாமும் சிலைகளை திருடி வெளிநாடுகளுக்கு கடத்திச்சென்று விற்றால் கோடி, கோடியாக சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டினார். மேலும், நாங்கள் இருடியம் இருப்பதாக ஆசைகாட்டி பணம் பறிக்கும் மோசடி தொழில் செய்து வந்தோம். அதில் போதுமான வருமானம் இல்லாததால், சிலை கடத்தல் தொழிலை தேர்வு செய்தோம். வந்தவாசி அருகே உள்ள பையூர் மற்றும் சவுந்தர்யபுரம் கோவில்களில் உள்ள சாமி சிலைகளை திருடுவதற்கு நான்தான் தேர்வு செய்து, திட்டமிட்டு கொடுத்தேன்.

சிலைகள் திருடுவதில் பலே கில்லாடியான மாரி கும்பலைச் சேர்ந்தவர்களை ஜெயக்குமார்தான் அழைத்து வந்தார். முதலில் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ராமானுஜபுரத்தில் இருக்கும் மணிகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள சிவன்-பார்வதி சிலைகளை திருடி வரச்சொல்லி மாரி குழுவினரை கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் தேதி அனுப்பி வைத்தோம். எங்கள் திட்டப்படி அவர்களும் கச்சிதமாக நாங்கள் சொன்ன சிலைகளை திருடி வந்தனர். அதன்பின் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி வந்தவாசி அருகே உள்ள பையூர், சவுந்தர்யபுரம் கோவில்களுக்கு சாமி சிலைகளை திருட அவர்களை அனுப்பி வைத்தோம்.

நான் நிருபராக பணியாற்றியதால், போலீஸ் அதிகாரி ரவிச்சந்திரனுடன் எனக்கு நல்ல பழக்கம் ஏற்பட்டது. அவரையும் சிலை கடத்தல் தொழிலில் சேர்த்துக் கொண்டோம். நான், ஜெயக்குமார், போலீஸ் அதிகாரி ரவிச்சந்திரன் ஆகியோர் தனித்தனியாக 2 கார்களில் வந்தவாசி சென்றோம். பையூர், சவுந்தர்யபுரம் கோவில்களிலும் மாரி குழுவினர் 6 சிலைகளை நாங்கள் திட்டமிட்டபடி கச்சிதமாக திருடி வந்தார்கள். அந்த சிலைகளை ஒரு நாள் எனது சொந்த ஊரில் உள்ள கிராமத்து வீட்டில் வைத்திருந்தோம். அதன்பின், அந்த சிலைகளை அங்கிருந்து சினிமா இயக்குநர் சேகர் வீட்டுக்கு கொண்டு வந்து வைத்திருந்தோம். பணத்திற்கு ஆசைப்பட்டு சிலை திருட்டு பாவத்தை செய்துவிட்டேன்”

இவ்வாறு பெண் நிருபர் மாலதி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்

இந்த வழக்கில் பெண் நிருபர் மாலதி போலீஸ் தரப்பு சாட்சியாக மாற சம்மதித்துவிட்டதாக கூறப்படுகிறது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மாலதி, நீதிமன்ற காவலில் நேற்று மாலை புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். மேலும், நீதிமன்ற அனுமதி பெற்று மாலதியை போலீஸ் தரப்பு சாட்சியாக பயன்படுத்த சிலை திருட்டு தடுப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Leave a Reply