மீண்டும் டாஸ்மாக் பாணியில் டைட்டில் வைத்துள்ள எம்.ராஜேஷ்?
இயக்குனர் எம்.ராஜேஷ் அவர்களின் படங்கள் அனைத்திலும் மெசேஜ் இருக்கின்றதோ இல்லையோ கண்டிப்பாக மது குடிக்கும் காட்சிகள் இருக்கும். அவரது சிவா மனசில சக்தி’ படம் முதல் சமீபத்தில் வெளியான ‘வாசுவும் சிவாவும் ஒண்ணாப் படிச்சவங்க’ படம் வரை டாஸ்மாக் காட்சிகள் இல்லாத படமே இல்லை. இவருடைய ஹீரோ பெரும்பாலும் போதையில்தான் இருப்பார். இதில் உச்சகட்டமாக ‘வாசுவும் சிவாவும் ஒண்ணாப் படிச்சவங்க’ படத்தின் பெயரை சுருக்கி VSOP என்ற பிரபல மதுவகையின் பெயரையே தனது படத்திற்கு வைத்து கோலிவுட்டில் புரட்சி செய்தவர் இயக்குனர் எம்.ராஜேஷ்.
இந்நிலையில் அவரது அடுத்த படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டிலிலும் வழக்கம்போல் அவரது பாணி உள்ளது. இந்த படத்தின் பெயர் ‘குடியும் குடித்தனமும்’. இந்த படத்தில் குடிகாரராக அதாவது ஹீரோவாக ஜீவா நடிக்கின்றார். இவர் ஏற்கனவே சிவா மனசுல சக்தி படத்தில் குடிகாரராக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருபக்கம் மதுவுக்கு எதிராக தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் போராடி வரும் நிலையில் தனது பாணியை மாற்றிக்கொள்ளாமல் குடிப்பதையே தனது படங்களிலும், படத்தின் தலைப்பாகவும் வைத்து கொண்டிருக்கும் எம்.ராஜேஷ் தனது பாணியை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.