மானாமதுரை அருகே பெரியகோட்டை சேவுக பெருமாள் அய்யனார் கோயிலில் 23 வருடங்களுக்கு பிறகு புரவி எடுப்பு திருவிழா நடந்தது. கிராமங்களில் உள்ள பொது மக்கள்,வயல்வெளி உள்ளிட்டவற்றை எல்லை காவல் தெய்வமான அய்யனார் காப்பதாக ஐதீகம்.இரவு நேரத்தில் ஊரை குதிரையில் வலம் வரும் அய்யனார் விவசாயம் செழிக்கவும் பொதுமக்கள் நோய் நொடி இன்றி பாதுகாப்பதாகவும் கிராமமக்களால் நம்பப்படுகிறது. அய்யனாருக்கு ஒவ்வொரு வருடமும் புதிதாக குதிரை செய்து விழா நடத்துவது வழக்கம்.பெரியகோட்டை உள்ளிட்ட ஏழு கிராமங்களை சேவுக பெருமாள் அய்யனார் காவல் காத்து வருவதாக கிராம மக்கள் நம்புகின்றனர்.23 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று அய்யனார் கோயிலுக்கு புரவி எடுப்பு திருவிழா நடந்தது.வேளார் வீட்டில் இருந்து கிராமமக்கள் புரவிகளை சுமந்து ஊர்வலமாக வலம் வந்தனர்.முன்னதாக புரவிகளுக்கு புத்தம்புது வேட்டி,துண்டு அணிவித்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. குழந்தை வரம் வேண்டி விரதம் இருந்த பக்தர்கள் பொம்மை செய்து அய்யனாருக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர்.புரவி எடுப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை பெரியகோட்டை உள்ளிட்ட ஏழு கிராமமக்கள் செய்திருந்தனர்.