மதுரையில் உள்ள யானை மலை 5 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
கடந்த முறை யானை மலையில் சிற்பக் கலைநகரம் அமைப்பது தொடர்பாக சர்ச்சை எழுந்தது. ஆனால் தற்போது இந்த மலை சர்ச்சையில் சிக்கியிருப்பதற்கு காரணம் ஒரு நாமம். ஆமாம் 3 கிலோமீட்டர் தூரம் நீண்டிருக்கும் இந்த மலையின் உச்சியில் யாரோ நாமம் வரைந்துள்ளனர்.
இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கறிஞர் டி.லஜபதி ராய் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், “1958-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட புராதான சின்னங்கள் மற்றும் தொல்லியல் இடங்கள் சட்டத்தின்படி யானை மலை பாதுகாக்கப்பட்ட பகுதி. அப்படிப்பட்ட பகுதியில் மத அடையாளத்தை இட்டுச் சென்றுள்ளனர். இது பாதுகாக்கப்பட்ட தளத்தை அவமதிப்பதாகும். இதை உடனடியாக கவனிக்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் மனுதாரர் கூறும்போது, “யானை மலை அடிவாரத்தில் நரசிங்கம் பெருமாள் கோவில் என்ற குடவரைக் கோவில் உள்ளது. தென் தமிழகத்தின் மிக முக்கிய நரசிங்கப் பெருமாள் கோவில்களில் இது ஒன்றாகும். அதேபோல் அங்கு முருகன் கோயில் ஒன்றும் இருக்கிறது. 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சமணர் குகைகளும் அங்கு உள்ளன.
பாரம்பரிய அடையாளம் மிக்க யானை மலையில் சிற்பக்கலை நகரம் அமைக்க அரசு முயன்றபோது ஐகோர்ட் அதற்கு முட்டுக்கட்டை போட்டது.
மேலும், நீதிமன்ற அனுமதியின்றி சோதனைக்காககூட பாறை மாதிரிகளை சேகரிக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டது. ஆனால், அண்மைகாலமாக யானை மலைக்கு முழுக்க முழுக்க இந்து அடையாளம் பூசும் வேலைகள் நடந்து வருகின்றன.
யானை மலையில் யானையின் நெற்றி போல் தோன்றும் இடத்தில் நாமம் வரைந்திருக்கின்றனர். உடனடியாக அதை அழிக்க வேண்டும். இல்லாவிட்டால் இதேபோல் தத்தம் மத நம்பிக்கையை பரப்ப முயல்பவர்கள் மலையில் இதுபோன்று என்ன வேண்டுமானாலும் வரைந்து செல்வர். தனியார் நிறுவனங்களும் மலையை விளம்பர பலகையாக பயன்படுத்த நேரிடும்” எனக் கவலை தெரிவித்தார்.
மற்றொரு மூத்த வழக்கறிஞர் ஜி.பிரபு ராஜதுரை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இது குறித்த பதிவு செய்தார். பாறைகளில் வரைவது உச்ச நீதிமன்றத்தின் 2002-ம் ஆண்டு உத்தரவுக்கு எதிரானது என அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், நரசிங்கம் கோயில் அர்ச்சகர், மலையில் நாமம் வரைந்தது யார் என்பது தனக்குத் தெரியாது. இருந்தாலும், அந்த நாமம் சில வருடங்களாகவே அங்கே இருக்கிறது. மலையடிவாரத்தில் உள்ள ஜோதிஷ்குடி கிராமத்தில் உள்ள உற்சவர் சிலையை சிலை கடத்தல்காரர்களிடமிருந்து காப்பதற்காக ஸ்ரீரங்கம் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அந்தச் சமயத்தில் அங்கு ஒரு நாமம் வரையப்பட்டது. ஆனால், புதிததாக வேறு ஒரு நாமத்தை யார் வரைந்தது என தனக்குத் தெரியாது என்றார்.