ஆதார் அட்டை இல்லாத 60 லட்சம் மாணவர்களுக்காக சிறப்பு முகாம்.
இதுவரை ஆதார் அட்டை பெறாத 60 லட்சம் மாணவர்களுக்காக பள்ளிகளில் ஆதார் அட்டை சிறப்பு முகாமை நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் பற்றிய விபரங்களை பள்ளி கல்வித்துறையினர் சேகரித்தபோது மொத்தமுள்ள ஒரு கோடியே 34 லட்சம் மாணவர்களில் சுமார் 60 லட்சம் மாணவர்களுக்கு ஆதார் எண் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வருடம் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கண்டிப்பாக ஆதார் அட்டை எண் தேவை என்பதால் ஆதார் எண் இல்லாத மாணவர்களுக்கு ஆதார் எண் பெற்றுத்தர, பள்ளிகளில் சிறப்பு ஆதார் முகாம்கள் நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் டாக்டர் கண்ணப்பன் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில், ”ஆதார் எண் இல்லாத மாணவர்களின் பெற்றோர்களிடம் அவர்களின் ஆதார் எண்ணை பெற வேண்டும். ஆதார் எண்ணை பெறுவதற்கு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தினர் அனைத்து குடும்பத்தினருக்கும் ஒரு ஒப்புகை சீட்டுக்களை வழங்கியுள்ளனர்.
ஆதார் எண் இல்லாத மாணவனின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ள அந்த ஒப்புகை சீட்டை ஒரு ஜெராக்ஸ் எடுத்து பள்ளி தலைமையாசிரியர்கள் தயாராக வைத்திருக்க வேண்டும். ஆதார் அட்டை இல்லாத மாணவர்களின் விபரங்கள் பெறப்பட்டவுடன் ஆதார் அட்டை வழங்கும் அமைப்பு மூலம் பள்ளிகளில் விரைவில் மாணவர்களுக்கு என்று தனியாக சிறப்பு ஆதார் எண் முகாம்கள் நடத்தப்படவுள்ளது. தேதி மற்றும் பிற விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.