70 ஆண்டுகளுக்கு முன்னர் தங்கம், வைரங்களுடன் புதைந்த ரெயில் கண்டுபிடிப்பு
கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த 2ஆம் உலகப் போரின் போது டன் கணக்கில் தங்கம் மற்றும் வைரத்துடன் மண்ணில் புதைந்து மாயமான ரெயில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1945ஆம் ஆண்டில் 2ஆம் உலகப் போர் நடைபெற்ற போது ஒரு கட்டத்தில் ஜெர்மனியை சேர்ந்த ஹிட்லரின் நாஷிப் படை ஆதிக்கம் செலுத்தியது. அப்போது எதிரி நாடுகளிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்கம், வைரம் மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இரண்டு ரெயில்கள் புறப்பட்டு சென்றன. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சென்ற அந்த ரெயில் போலந்து நாட்டு எல்லையில் உள்ள வால்பிரையச் என்ற நகரத்தின் அருகே சென்ற போது திடீரென நடத்தப்பட்ட குண்டு வீச்சு தாக்குதலில் மண்ணில் புதைந்து மாயமானது. தங்கம் மற்றும் வைரத்துடன் புதைந்த அந்த ரெயிலை கண்டுபிடிக்க பல முயற்சிகள் நடைபெற்றபோது இதுவரை கண்டுபிடிக்க முடியாத நிலை இருந்தது. ஆனால் 70 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது போலந்து நாடு மாயமான அந்த ரெயிலை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.
ரேடார் மூலம் அந்த ரெயில் புதைந்து கிடக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலந்து துணை கலாசார மந்திரி பியோர்டார் ஷுசோவ்ஸ் கி தெரிவித்துள்ளார். அந்த ரெயில் புதைந்து கிடக்கும் இடம் 99 சதவீதம் சரியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.
ரெயிலில் இருக்கும் பொக்கிஷங்களை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் யாரும் அதை தேட வேண்டாம். ஏனெனில் அதை தொட்டால் உடனே வெடிக்கும் வகையில் அது உருவாக்கப்பட்டிருக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் அந்த ரெயிலில் உள்ள தங்கம் மற்றும் வைரம் தங்கள் நாட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டதால், அதை தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என ரஷ்யா கோரிக்கை விடுத்துள்ளது.