இந்துத்துவாவை எதிர்த்த பிரபல எழுத்தாளர் சுட்டுக்கொலை. கர்நாடகத்தில் பரபரப்பு

இந்துத்துவாவை எதிர்த்த பிரபல எழுத்தாளர் சுட்டுக்கொலை. கர்நாடகத்தில் பரபரப்பு

MM KALBURGIபிரபல எழுத்தாளரும், ஹம்பி பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான எம்.எம்.கல்பர்கி கர்நாடக மாநிலத்தில் நேற்று மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் தார்வாட் நகரில் உள்ள கல்பர்கியின் வீட்டுக்கு நேற்று காலை 9 மணியளவில் ஒரு மர்ம நபர் வந்து கதவு தட்டியுள்ளார். கல்பர்கியின் மனைவி கதவை திறந்தவுடன் திடீரென உள்ளே வந்த அந்த மர்ம நபர் தனது துப்பாக்கியை எடுத்த கல்பர்கியை சரமாரமாக தனது துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில் பலத்த காயம் அடைந்த கல்பர்கி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி கல்பர்கி உயிரிழந்தார்.

இந்துத்துவா அமைப்பை தொடர்ந்து கல்பர்கி தீவிரமாக தாக்கி எழுதி வந்ததால் ஏற்கனவே பலமுறை அவருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. அதனால் அவரது வீட்டிற்கு ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு அளித்து வந்தனர். ஆனால் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் தான், கல்பர்கி கேட்டுக் கொண்டதற்கிணங்க அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் மறைந்த எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தி மற்றும் கல்பர்கி ஆகியோர் இந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக கூறி ஒரு இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர் புகார் கூறியிருந்தார். அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர். அனந்தமூர்த்தி கூறிய கருத்தை ஆதரித்து கல்பர்கி கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பஜ்ரங் தளம், வி.எச்.பி. மற்றும் ஸ்ரீராம் சேனே ஆகிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இதுதொடர்பாக பஜ்ரங் தளத்தினர் போராட்டம் நடத்தியபோது கல்பர்கி வீட்டையும் தாக்கினர். தற்போது நடந்துள்ள கொலைக்கும் இந்துத்துவா அமைப்புகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கல்பர்கியை கொலை செய்த கொலையாளியை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply