இலங்கைக்கு கப்பல் வழங்கிய இந்தியாவுக்கு வைகோ, ராமதாஸ் கண்டனம்

இலங்கைக்கு கப்பல் வழங்கிய இந்தியாவுக்கு வைகோ, ராமதாஸ் கண்டனம்

Vaiko-Ramadoss
இலங்கை கடற்படைக்கு இந்தியா ‘வராஹா’ என்ற கப்பலை வழங்கியுள்ளது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் பாமக நிறுவனர் ராம்தாஸ் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆகஸ்ட் 27 ஆம் தேதி அன்று இலங்கையின் தலைநகரமாம் கொழும்பு நகர் துறைமுகத்தில் ‘வராஹா’ கப்பலை இலங்கைக்கு தாரை வார்த்த இந்திய அரசின் செயல் ஈழத்தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் இந்தியா செய்த மன்னிக்கவே முடியாத பச்சைத் துரோகம் ஆகும்.

ஈழத்தமிழர்களைக் காத்து சுதந்திரத் தமிழ் ஈழத்தை வென்றெடுக்க மகத்தான தியாகத்தாலும், தீரத்தாலும் களமாடிய தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை அழிக்கவும், ஈழத் தமிழர்களை சிங்களவனுக்குக் கொத்தடிமைகள் ஆக்கவும் திட்டமிட்ட இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, முப்படை ஆயுதங்களையும், ரடார்களையும் வழங்கியதோடு இந்தியா- இலங்கை கடற்படை தகவல் பரிமாற்ற ஒப்பந்தத்தை 2006 ஆம் ஆண்டு செய்ததை, அன்று முதல் நான் குற்றம் சாட்டி வந்துள்ளேன். விடுதலைப் புலிகளுக்கு வந்த 14 கப்பல்களை இலங்கைக் கடற்படை கடலில் மூழ்கடிக்க இந்தியக் கப்பல் படை உதவியது என்பதையும் சொல்லி வந்தேன். எனது குற்றச்சாட்டு உண்மை என்பதை ‘வராஹா’ கப்பலை இந்திய அரசு இலங்கைக்குத் தாரை வார்த்ததன் மூலம் உள்ளங்கை நெல்லிக்கனி என நிரூபணம் ஆகிவிட்டது.

1992 ஆம் ஆண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த ‘வராஹா’ கப்பல், தொடக்கத்தில் கடலோரக் காவல் படை கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, 2006 ஆம் ஆண்டில் தமிழ் இனக் கொலைகாரன் ராஜபக்சே வேண்டுகோளின் பேரில் சிங்களக் கடற்படையின் சேவைக்குக் குத்தகைக்கு விடப்பட்டது. இந்தக் கப்பலுக்கு இலங்கை சிங்களக் கடற்படை ‘சாகரா’ என பெயர் சூட்டியது. பொருத்தமான பெயர். தமிழர்களைச் சாகடிக்கத்தானே பயன்பட்டது. விடுதலைப் புலிகளின் கடற்படையாம் சூசை தலைமை தாங்கிய கடல் புலிகளை சிங்களக் கடற்படை அழிப்பதற்கு இந்தியக் கப்பல் படை முழுமையாகக் பயன்படுத்தப்பட்டதற்கு இந்த ‘சாகரா’ சரியான சாட்சியம் ஆகும்.

விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க இந்திய அரசுதான் முழுக்க உதவியது என்று ராஜபக்சே பகிரங்கமாகச் சொன்னதைத் தமிழர்கள் ஒருநாளும் மறந்துவிடக் கூடாது. காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வும், பாட்டாளி மக்கள் கட்சியும் அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கவும், ஈழத் தமிழ் இனப்படுகொலையை சிங்கள அரசு நடத்துவதற்கும் முழுக்க முழுக்க காரணம் ஆகும் என்பதையும் தமிழர்கள் மறந்துவிடக் கூடாது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்த அதே துரோகத்தை, பாரதிய ஜனதா கட்சி தலைமை தாங்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் இன்றைக்குச் செய்கிறது.

இந்திய அரசு தற்போது செய்துள்ள பச்சைத் துரோகத்தைத் தமிழ் இனம் ஒருபோதும் மன்னிக்கக் கூடாது. தமிழ்க் குலத்துக்கு எதிராக இந்திய அரசு தொடர்ந்து வினை விதைக்கிறது. இந்த வினைக்குரிய அறுவடையை வருங்காலம் நிச்சயமாக நிரூபிக்கும் என எச்சரிக்கிறேன்” இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: , “இந்திய கடலோரக் காவல்படைக்கு சொந்தமான ஐ.சி.ஜி. வராஹா என்ற போர்க்கப்பலை சிங்களக் கடற்படைக்கு இந்தியா இலவசமாக வழங்கியுள்ளது. தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வரும் இலங்கைக்கு இந்தியா கப்பலைக் கொடையாக அளித்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இலங்கை ஒருபோதும் நமக்கு விசுவாசமாக இருந்ததில்லை என்பதை நன்றாக உணர்ந்திருந்தும் அந்நாட்டுக்கு மத்திய அரசு பல உதவிகளை வழங்கி வருகிறது. இத்தகைய உதவிகளால் பாதிக்கப்படுவது தமிழ்நாடு தான் என்ற போதிலும், அது தொடர்பாக தமிழக அரசிடமும், அரசியல் கட்சிகளிடமும் ஆலோசனை நடத்துவதோ, கருத்துக் கேட்பதோ கிடையாது. கச்சத்தீவை தாரை வார்த்ததில் தொடங்கி, 2009 ஆம் ஆண்டு இறுதிப் போருக்கு ஆயுதம் வழங்கியது வரை மத்திய அரசின் அணுகுமுறை துரோகி நாடான இலங்கைக்கு சாதகமாகவும், தமிழகத்திற்கு பாதகமாகவும் தான் இருந்து வருகிறது. இப்போது கூட ஐ.சி.ஜி. வராஹா போர்க்கப்பலை இலங்கைக்கு தாரை வார்ப்பதில் வெளிப்படையான அணுகுமுறை கடைபிடிக்கப்படவில்லை. இந்த விஷயம் தமிழக அரசியல் கட்சிகளுக்குத் தெரிந்தால் கடும் எதிர்ப்பு எழும் என்பதால், அந்த கப்பலை இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல்படை அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை கொழும்பு துறைமுகத்திற்கு ரகசியமாக கொண்டு சென்று ஒப்படைத்து விட்டு திரும்பியுள்ளனர். இப்போது கூட இந்த செய்தியை இலங்கை பாதுகாப்புத்துறை தான் வெளியிட்டிருக்கிறதே தவிர, இந்திய பாதுகாப்புத்துறை வாய் பேசாமல் தான் இருந்து வருகிறது.

இலங்கைக்கு இந்திய போர்க்கப்பல் ஐ.சி.ஜி. வராஹா தரப்பட்டதை சாதாரண உதவியாக கருதி விட்டு விட முடியாது. இதன் பின்னணியில் பல துரோகங்களும், ரகசியங்களும் அடங்கியிருக்கின்றன. இந்திய கடலோரக் காவல்படைக்கு சொந்தமான ஐ.சி.ஜி. வராஹா, ஐ.சி.ஜி. விக்ரஹா ஆகிய இரு போர்க்கப்பல்கள் கடந்த 2006 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படைக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டன. எஸ்.எல்.என் சாகரா, எஸ்.எல்.என் சயூரளா என பெயர் மாற்றம் செய்யப்பட்ட இந்த இரு போர்க்கப்பல்கள் தான் இறுதிப் போரில் அப்பாவி ஈழத்தமிழர்களை படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டன. அப்போதே இந்த போர்க்கப்பல்களை திரும்பப்பெற வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். 2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்த பின் தமிழகத்தில் எழுந்த கொந்தளிப்பை அடக்கும் வகையில் இலங்கைக்கு வழங்கப்பட்ட  2 போர்க் கப்பல்களும்  திரும்பப் பெறப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.

அதன்படி பெறப்பட்ட ஐ.சி.ஜி. விக்ரஹா புதுப்பிக்கப்பட்டு மீண்டும் இலங்கைக்கே வழங்கப்பட்டது.  ஐ.சி.ஜி. சரயு என்ற இந்திய போர்க்கப்பலும் 2010 ஆம் ஆண்டில் இலங்கைக்கு இலவசமாக வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கொல்கத்தாவில் முற்றிலுமாக புதுப்பிக்கப்பட்ட ஐ.சி.ஜி. வராஹா போர்க் கப்பலை இந்தியா இப்போது இலவசமாக இலங்கைக்கு வழங்கியுள்ளது. இதைப் புதுப்பிப்பதற்காக செலவிடப்பட்ட பல கோடி ரூபாயை இந்திய அரசே வழங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை ஒதுபோதும் துணையாக இருக்கப் போவதில்லை. ஏற்கனவே ஈழத் தமிழர்களை படுகொலை செய்வதற்காக இந்த கப்பலை பயன்படுத்திய இலங்கை, இப்போது வங்கக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை கைது செய்வது, தாக்குவது, சுட்டுக் கொல்வது போன்ற மனித உரிமை மீறல்களை அரங்கேற்றுவதற்கு தான் பயன்படுத்தப் போகிறது. உலகில் சொந்த நாட்டு மீனவர்களை தாக்க அடுத்த நாட்டு கடற்படைக்கு ஆயுதங்களை வழங்கிய அவப்பெயர் தான் இந்தியாவுக்கு ஏற்படப்போகிறது. இந்த பழியை தடுக்க வேண்டுமானால், இதுவரை இலங்கைக்கு இலவசமாக வழங்கப்பட்ட 3 போர்க்கப்பல்கலையும் மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply