எல்.எல்.பி. ஹானர்ஸ் சேர்க்கை: செப்டம்பர் 7-இல் கலந்தாய்வு

images (7)

மூன்றாண்டு ஹானர்ஸ் சட்டப் படிப்பில் (எல்.எல்.பி.) 2015-16 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு செப்டம்பர் 7-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.

இதற்கான அழைப்புக் கடிதங்கள் தகுதியுள்ள மாணவர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இளநிலை சட்டப் படிப்புகளுக்கான சேர்க்கையை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.

இதன்படி, இந்த கல்வியாண்டு (2015-16) சட்டப் படிப்பு சேர்க்கையையும் நடத்தப்படுகிறது.

இந்த நிலையில், வயது உச்ச வரம்பு சர்ச்சை காரணமாக, மூன்றாண்டு சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் நிறுத்தப்பட்டு, பின்னர் ஆகஸ்ட் 12 முதல் 21-ஆம் தேதி வரை மீண்டும் விநியோகம் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் மூன்றாண்டு ஹானர்ஸ் (எல்.எல்.பி.) சட்டப் படிப்புக்கான சேர்க்கையை முதல் கட்டமாக நடத்த உள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக உயர் அதிகாரி கூறியது:

எல்.எல்.பி. ஹானர்ஸ் சட்டப் படிப்புக்கான கலந்தாய்வு செப்டம்பர் 7-ஆம் தேதி ஒரே நாளில் நடத்தப்பட உள்ளது. இதற்கான அழைப்புக் கடிதங்கள் தகுதியுள்ள மாணவர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்தப் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல், கட்-ஆஃப் விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

எனவே, அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாவிட்டாலும், தகுதியுள்ள மாணவர்கள் கலந்தாய்வில் நேரடியாகப் பங்கேற்கலாம். இணைப்புக் கல்லூரிகளில் வழங்கப்படும் மூன்றாண்டு சட்டப் படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த இரு தினங்களில் இந்தப் பணிகள் நிறைவுபெற்றுவிடும். அதன் பிறகு, இந்தப் படிப்புக்கான கலந்தாய்வு தேதி நிர்ணயம் செய்யப்பட்டு, அறிவிப்பு வெளியிடப்படும் என்றார். 

Leave a Reply