ஒரே மாதத்தில் ரூ.17,555 கோடி அந்நிய முதலீடுகள் இந்தியாவில் இருந்து வெளியேற்றம்

ஒரே மாதத்தில் ரூ.17,555 கோடி அந்நிய முதலீடுகள் இந்தியாவில் இருந்து வெளியேற்றம்
india
கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவுக்கு ரூ.5,323 கோடி அந்நிய முதலீடு வந்த நிலையில்  சர்வதேச சூழ்நிலை காரணமாக ஆகஸ்ட் மாதத்தில் சுமார் ரூ.17,555 கோடி ரூபாய் அந்நிய முதலீடு இந்தியாவில் இருந்து வெளியேறி உள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் கூறியுள்ளனர். இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் வலுவிழந்து காணப்படுவது மற்றும் இந்திய பங்குச்சந்தைகள் ஆகஸ்ட் மாதத்தில் வரலாறு காணாத அளவுக்கு சரிந்ததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

கருப்பு திங்கள் என்று கூறப்பட்ட கடந்த 24-ம் தேதி திங்கட்கிழமை  மட்டும் ஒரே நாளில் ரூ.5,173 கோடி இந்திய சந்தையில் இருந்து வெளியேறி உள்ளதாகவும், அன்று மட்டும் சென்செக்ஸ் 1624 புள்ளிகள் சரிந்து அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேற காரணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

நடப்பு ஆண்டில் தொடக்கத்தில் இருந்து இதுவரை பங்குச் சந்தையில் 27,463 கோடி ரூபாய் முதலீடும், கடன் சந்தையில் 38,732 கோடி ரூபாய் முதலீட்டையும் அந்நிய முதலீட்டாளர்கள் செய்திருக்கிறார்கள்.  கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்திய சந்தையில் இருந்து அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேறி இருந்தாலும், பங்குச்சந்தை சரிவினை பயன்படுத்தி மியுச்சுவல் பண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை 9,500 கோடி ரூபாய் அளவுக்கு மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூலை மாதத்தில் 5,442 கோடி ரூபாய் மட்டுமே மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஆகஸ்ட் 24 முதல் 27 தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் 7,188 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. அதாவது பங்குச்சந்தை அதிகமாக சரிந்த இந்த காலத்தில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி முதலீடு செய்திருக்கின்றன.

Leave a Reply