மருத்துவ கல்லூரி மாணவிகளுக்கு திடீர் உடை கட்டுப்பாடு? லெகின்ஸ், ஜீன்ஸ் அணியக்கூடாது

மருத்துவ கல்லூரி வகுப்புகள் நாளை முதல் தொடக்கம். மாணவிகளின் உடையில் திடீர் கட்டுப்பாடு

studentsகடந்த சில நாட்களுக்கு முன்னர் மருத்துவக்கல்லூரிகளில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு கலந்தாய்வு நடைபெற்று, தற்போது வகுப்புகள் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அதாவது நாளை முதல் தொடங்கவுள்ளன. இந்நிலையில் நாளை முதல் வகுப்புகளுக்கு வரும் மாணவிகள் ‘லெகிங்ஸ்’ என்ற ஆடையை அணிந்து கல்லூரிக்கு வரக்கூடாது என்று மருத்துவக் கல்வி இயக்ககம் (டிஎம்இ) கட்டுப்பாடு விதித்துள்ளது.

நாளை முதல் மருத்துவக் கல்லூரியில் படிக்க வரும் மாணவ, மாணவிகள் என்ன மாதிரியான ஆடைகளை அணிய வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்ககம் இன்று அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விபரம் பின்வருமாறு:

அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் ஜீன்ஸ் பேன்ட், டி-சர்ட், ஸ்லீவ்லெஸ் மேலாடைகளை அணியக் கூடாது. மாணவிகள் சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் போன்ற ஆடைகளை மட்டுமே அணிந்து வரவேண்டும். தலை முடியை விரித்து விடாமல் இறுக்கமாக கட்டிக்கொண்டு வகுப்புக்கு வரவேண்டும். அதேபோல மாணவர்கள் பேன்ட், சட்டை அணிந்து இன் செய்து கொண்டும், ஷூ அணிந்தும் வர வேண்டும்.

மாணவ, மாணவிகள் வகுப்பறையில் செல்போன் உபயோகப்படுத்தக் கூடாது போன்ற பல கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த கல்வி ஆண்டு முதல் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவிகள் ‘லெகிங்ஸ்’ ஆடையை அணிந்து வரக்கூடாது என்ற புதிய கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் குறித்து மருத்துவக் கல்வி இயக்கக மாணவர் தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் உஷா சதாசிவம் கூறும்போது, “அரசு மருத்துவக் கல்லூரிகளுக்குள் ஜீன்ஸ் பேன்ட், டி-சர்ட், ஸ்லீவ் லெஸ், லெகிங்ஸ் போன்ற ஆடைகளை மாணவ, மாணவிகள் அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகளை கண்காணிக்கும்படி அனைத்து கல்லூரி டீன்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளார்.

அதே நேரத்தில் இதுகுறித்து கருத்து கூறியுள்ள இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் மாநில செயலாளர் பி.பத்மாவதி கூறும்போது, “பெண்கள் எல்லாத் துறைகளிலும் முன்னேறி வருகிறார்கள். எந்த இடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும். எந்த மாதிரியான ஆடைகளை அணிய வேண்டும் என்று பெண்களுக்கு தெரியும். விருப்பமான ஆடைகளை அணிந்துகொள்ள பெண்களுக்கு உரிமை உள்ளது. எனவே ஆடைக் கட்டுப்பாடு தேவையற்றது. குழந்தைகள் முதல் எல்லோரும் பார்க்கும் சினிமாவில் பணம் சம்பாதிப்பதற்காக பெண்களை அரைகுறை ஆடையில் ஆபாசமாக காட்டுகின்றனர். இதை முறைப்படுத்தினால் நன்றாக இருக்கும்” என்று கூறினார்.

Leave a Reply