நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாட்டின் எதிரியாக திகழ்கிறார். ராம்ஜெத் மலானி ஆவேசம்

ramjethmalaniநிதியமைச்சர் அருண் ஜேட்லி நாட்டின் எதிரியாக திகழ்வதாக முன்னாள் ராணுவத்தினர் கலந்து கொண்ட விழா ஒன்றில் பாஜக மூத்த தலைவர் ராம் ஜெத்மலானி ஆவேசமாக  கூறியுள்ளார்.

ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டம் என்பதை  உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் முன்னாள் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.78 நாட்களாக தொடர்ந்து நடைபெறும் இந்த போராட்டத்தில் நேற்று பிரபல பாஜக மூத்த தலைவர் ராம் ஜெத்மலானி கலந்துகொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றாக சேர்ந்த நாட்டு மக்களை கீழே தள்ளிவிட்டனர். பிரதமர் நரேந்திர மோடி மீது நான் மிகப் பெரிய நம்பிக்கை கொண்டிருந்தேன். ஆனால் அவர் அந்த நம்பிக்கையை சிதைத்துவிட்டார்.

நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாட்டின் எதிரியாக திகழ்கிறார். இவர்களை போல நானும் ஒரு அரசியல்வாதி என்று கூறுவதில் வெட்கப்படுகிறேன். ஆனால் நான் அவர்களை போல மக்களையும் நண்பர்களையும் மறந்து பதவியில் திளைக்கும் அரசியல்வாதி இல்லை. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல், தேசமக்களை பாதுகாத்த வீரர்களுக்காக நான் இங்கு வந்தேன்” என்று கூறினார்.

ராணுவத்தில் 1996-க்கு முன்பு ஒய்வு பெற்றவர்களுக்கு ஒரு வகையான ஓய்வூதியமும், 1996-2005 வரை மற்றும் 2006-2008 வரை ஓய்வு பெற்றவர்களுக்கு வெவ்வேறுவிதமாகவும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அதன் பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு கூடுதலாக ஓய்வூதியம் கிடைக்கிறது.

இந்த முரண்பாட்டைக் களையும் வகையில் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று முன்னாள் ராணுவ வீரர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தனர்.

இதற்காக பட்ஜெட்டில் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2014-15-ம் நிதியாண்டில் அமலுக்கு வரவேண்டிய இந்த சட்டம் இன்னும் நடைமுறைபடுத்தவில்லை.

இவ்வாறு ராம்ஜெத்மலானி கூறினார்.

Leave a Reply