‘பாயும் புலி’யை தடுக்கும் விநியோகிஸ்தர் மீது போலீஸில் புகார்
விஷால் நடித்த பாயும் புலி திரைப்படம் வரும் வெள்ளியன்று உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது. இந்த படம் வெளியாகவுள்ள தியேட்டர்கள் அனைத்தும் தமிழகம் முழுவதும் புக் ஆகி ரிலீஸுக்கு தயாரான நிலையில் இருக்கின்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்தை ஒருசில விநியோகிஸ்தர்கள் ரிலீஸ் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்த விநியோகஸ்தர் மீது ‘பாயும் புலி’ படத்தை தயாரித்த வேந்தர் மூவீஸ் நிறுவனம் போலீஸில் புகார் செய்துள்ளது.
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.தாணு மற்றும் நிர்வாகிகள், தயாரிப்பாளர்கள் ஆகியோர் நேற்று சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு சென்று புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அதில், “வேந்தர் மூவீஸ் சார்பில் வரும் 4-ம் தேதி ‘பாயும் புலி’ திரைப்படத்தை வெளியிடுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. லிங்கா திரைப்பட விவகாரத்தில் வேந்தர் மூவீஸ் நிறுவனத்துக்கும், சிங்காரவேலன் என்ற விநியோகஸ்தருக்கும் பிரச்சினை ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் பாயும் புலி திரைப்படத்தை வெளியிடுவதற்கு பல இடையூறுகளை செய்து வருகிறார்.
இந்த திரைப்படத்தை திரையிடக் கூடாது என்று தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்க உரிமையாளர்களை சிங்காரவேலன் மிரட்டி வருகிறார். உண்மைக்குப் புறம்பான தகவல்களையும் பரப்பி வரும், சிங்காரவேலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.