கர்நாடகாவில் இந்து அமைப்புகளால் தொடர்ந்து மிரட்டப்படும் எழுத்தாளர்கள். பெரும் பரபரப்பு

கர்நாடகாவில் இந்து அமைப்புகளால் தொடர்ந்து மிரட்டப்படும் எழுத்தாளர்கள். பெரும் பரபரப்பு
bhagwan
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கர்நாடகாவில் பிரபல எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி சுட்டுக்கொல்லப்பட்ட அதிர்ச்சியில் இருந்தே அம்மாநில மக்கள் மீளாத நிலையில் மற்றொரு கன்னட எழுத்தாளரான கே.எஸ்.பகவான் அவர்களுக்கு இந்து அமைப்பான பஜ்ரங் தளம் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  இதனால் அவரது வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மங்களூரு மாவட்டம் பண்டுவால் பகுதி பஜ்ரங் தளம் அமைப்பின் இணை செயலாளர் புவித் ஷெட்டி நேற்று தனது சமூக வலைத்தள பக்கத்தில், “அப்போது யு.ஆர்.அனந்தமூர்த்தி; இப்போது எம்.எம். கல்புர்கி; அடுத்த இலக்கு கே.எஸ்.பகவான்” என பதிவு செய்துள்ளார். இதனையடுத்து அவர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் இன்று அவரை கைது செய்தனர். புவித் ஷெட்டியின் கைது நடவடிக்கைக்கு பஜ்ரங் தளம், ராம் சேனா ஆகிய அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மைசூரு மகாராஜா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியரும், மூத்த கன்னட எழுத்தாளருமான பகவானுக்கு மங்களூருவைச் சேர்ந்த பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தொலைபேசி மூலம் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் மைசூரு மாநகர காவல் ஆணையர் தயானந்த், பகவானின் வீட்டுக்கு 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய‌ போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டார். மேலும் பகவானுக்கு தொலை பேசியில் மிரட்டல் விடுத்த‌தாக மைசூருவைச் சேர்ந்த ஹரீஸ் (24) என்ற இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக பகவான் செய்தியாளர்களிடம் கூறியபோது, “மக்களின் வாழ்வை சீரழிக்கும் மூடநம்பிக்கைக்கு எதிராகவும், ஏழைகளை சுரண்டி பிழைக்கும் மடாதிபதிகளுக்கு எதிராகவும் தொடர்ந்து பேசிவருவதால் க‌டந்த 35 ஆண்டுக்கும் மேலாக பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து வருகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு, நான் எழுதிய’ சங்கராச்சாரியாரின் தத்துவங்கள்’ என்ற நூலுக்கு கடும் எதிர்ப்பு வந்தது. இதேபோல கடவுளின் பெயரைச் சொல்லி கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் மடாதிபதிகளை தோலுரிக்கும் கட்டுரையை எழுதியதற்காக தாக்கப்பட்டேன். எழுத்தாளர்களுக்கு விடுக்கப்படும் இத்தகைய கொலை மிரட்டல்களை அரசும், சமூகமும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இதை ஒடுக்கும் எதிர் வினையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply