பத்தாயிரம் முன்னோர்களை கண்டுபிடித்த அதிசய முதியவர். கின்னஸ் சாதனை கிடைக்குமா?
நம்முடைய முன்னோர்களில் இரண்டு அல்லது மூன்று தலைமுறையினர்களை பற்றி நாம் தெரிந்து வைத்திருப்பதே அரிதாக கருதப்படும் நிலையில் இங்கிலாந்தில் உள்ள ஒருவர் தனக்கு முன்னோர்களாக இருந்த பத்தாயிரம் பேர்களை கண்டறிந்துள்ளார். இது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
இங்கிலாந்தின் டாண்ட்டன் என்ற நகரில் வசித்து வரும் 83 வயது ராய் பிளாக்மோர் என்பவர் ஏழு வயதில் அனாதை ஆனதால் தனது முன்னோர்கள் யார் யார் என்பதை கண்டுபிடிப்பதில் மிகவும் தீவிரம்காட்டினார்.
இங்கிலாந்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள பாத் நகரில் ராய் பிறந்த அவர் தனது முன்னோர்களில் பத்தாயிரத்துக்கும் மேலானவர்களை கண்டறிந்துள்ளதாக சமீபத்தில் ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார். இவர் இங்கிலாந்து ராணிக்கு 22-வது ஒன்றுவிட்ட உறவினர் என்றும் வெற்றிவீரர் வில்லியம் மற்றும் ஆல்பிரட் ஆகியோரின் பரம்பரை என்பதையும் அவர் ஆதாரத்துடன் விளக்கியுள்ளார்.
கி.பி. 500-ம் ஆண்டில் வாழ்ந்த இவரது குடும்பத்தினர் முதலில் செர்டிக் குடும்பமாக இருந்தாகவும் அதன் பின்னர் பிரெஞ்சு அரச குடும்பமாகி, பத்தாம் நூற்றாண்டில் அரசாண்ட பிரெஞ்சு ராஜா ஹூக் கேபெட் ஆகியோர் வரை நீள்வதாக அவர் தெரிவித்தார்.
ராய் தனது மனைவி கிக்ரிட்டுடன், பல ஆண்டுகள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு பயணித்து இணையத்தின் வருகைக்கு முன்பே, பழைய ஆவணம் மற்றும் காப்புப்பத்திரங்கள் போன்றவற்றை அலசி ஆராய்ந்து இந்த மரபுவழி அட்டவணையை தயார் செய்ததாக தெரிவித்தார்.
இவ்வளவு அதிகமான மூதாதையரை கண்டறிந்த சாதனைக்காக கின்னஸ் இவரை அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.