14 மாத மோடி ஆட்சி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கின்றது. ஆர்.எஸ்.எஸ் பாராட்டு

14 மாத மோடி ஆட்சி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கின்றது. ஆர்.எஸ்.எஸ் பாராட்டு
modi
பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசை அவ்வப்போது விமர்சனம் செய்து வந்தாலும், தற்போதைய மத்திய அரசு சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள், ஆர்எஸ்எஸ் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்ற 3 நாள் ஒருங்கிணைப்பு கூட்டம் டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. நேற்றைய இறுதி நாளில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து ஆர்எஸ்எஸ் இணை பொதுச்செயலர் தத்தாத்ரேயா ஹொசபலே நிருபர்களிடம் கூறியதாவது:

இந்த ஆலோசனைக் கூட்டம் அரசின் செயல்பாடுகளை மதிப்பிடுவதற்காக நடத்தப்பட்டது அல்ல. ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் என்ற முறையில் அமைச்சர்களுக்கு தேவையான யோசனைகளை தெரிவித்தோம். அப்படி சொல்வது உரிமையாகும்.

இதுவரை 14 மாதம் கடந்துள்ளது மோடி அரசு. இன்னும் போதிய அவகாசமும் காலமும் உள்ளது. மோடி அரசு சரியான திசையில் செயல்பட்டு வருகிறது. கடமை உணர்வு லட்சியப்பிடிப்புடன் ஆட்சி நடக்கிறது. பல நல்ல சாதனைகளை செய்துள்ளனர். அவற்றை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஒவ்வொருவரையும் 100 சதவீதம் திருப்திபடுத்த முடியாது.

ஆட்சியைப் பற்றி நாங்கள் மதிப்பீடு செய்யவில்லை. யோசனைகளை பகிர்ந்துகொண்டோம். ஆர்எஸ்எஸ் அமைப்பு சட்டத்துக்கு புறம்பானது அல்ல. நாங்களும் நாட்டின் குடிமக்கள்தான்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் தொண்டர்கள் என்ற முறையில் அமைச்சர்களிடம் ஆலோசனை நடத்த உரிமை உள்ளது. இதில் எந்தவித ரகசியமும் கிடையாது.

மத்திய அரசை திரைமறைவிலிருந்து ஆர்எஸ்எஸ் இயக்குவதாக காங்கிரஸ் கூறும் குற்றச்சாட்டுக்கு பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை. காங்கிரஸும் திரைமறைவிலிருந்து ஆட்சி நடத்தியது. எங்களை கேள்வி கேட்க அவர்களுக்கு தார்மிக உரிமை இல்லை. அரசில் இடம்பெற்றுள்ளவர்களிடம் ஆலோசனை நடத்துவதில் தவறில்லை.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் ராமர் கோயில் கட்டும் விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் காத்திருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆர்எஸ்எஸ் ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். உள்நாட்டுப் பாதுகாப்பு, நக்சல் பிரச்சினை, ஜம்மு-காஷ்மீர் நிலவரம் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பான ஆலோசனையில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ், மனோகர் பாரிக்கர், வெங்கய்ய நாயுடு, அனந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply