உயிரைப் போக்குமா பூச்சிவிரட்டி ஸ்பிரே?

aerosol-spray-can-350x250

எரிவாயு அடுப்பு பயன்படுத்தும் போது பூச்சிவிரட்டி மருந்துகளை (ஸ்பிரே) உபயோகிக்க வேண்டாம் என எச்சரித்திருக்கிறார்கள் மருத்துவர்கள். ஏசி இயங்கிக் கொண்டிருக்கும் நிலையிலும் இதைப் பயன்படுத்த வேண்டாம் என்கிறார்கள். சாதாரண சருமப் பாதிப்பில் தொடங்கி, தீவிரமான சுவாசக் கோளாறுகள் வரை இந்த ஸ்பிரேக்கள் காரணமாக ஏற்படக் கூடும் என்பதே காரணம். சமையலறை தீ விபத்து மற்றும் ஏசியில் நச்சு வாயு உருவாகும் அபாயமும் கூட, தவறான பயன்பாட்டால் ஏற்படக்கூடும்.

ஆகவே, இந்த எச்சரிக்கை! கரப்பான்பூச்சிக்கு ஒரு நிறம்… கொசுவுக்கு இன்னொரு நிறம்… இப்படி விதவிதமான வண்ணங்களில், அழகான குடுவைகளில் மூக்கைத் துளைக்கும் நறுமணத்துடன் பலவிதமான ஸ்பிரே வகைகள் ஒவ்வொரு வீட்டின் அலமாரியிலும் தவறாமல் இடம் பெறுகின்றன. குளியல் மற்றும் கழிவறையில் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளைக் கொல்வதற்கென்றே ஆசிட், பிளீச்சிங் பவுடர், பினாயில் போன்றவை ஒவ்வொரு மாதமும் மளிகை பட்டியலில் கண்டிப்பாக இடம்பெறுகின்றன.

வசீகரிக்கும் இந்த பூச்சிவிரட்டிகள், கிருமிநாசினிகள் ஆகியவற்றில் உயிரையே பறிக்கும் ஆபத்துகளும் உள்ளன’’ என எச்சரிக்கிறார் சுவாச நோய்கள் நிபுணர் வினோத்குமார். இன்றைய சூழலில் வாழ்க்கை முறை மாற்றங்கள், வீடு மற்றும் கழிவறை அமைக்கப்பட்டுள்ள இடம் காரணமாக கரப்பான் பூச்சி, கொசு ஆகியவற்றை விரட்டுவதற்கு பிரேத்யகமான ஸ்பிரேக்களை பயன்படுத்துவது தவிர்க்க முடியாதது.

கழிவறைகளை சுத்தம் செய்வதற்காக கிருமிநாசினிகளான ஆசிட், பிளீச்சிங் பவுடர், பினாயில் உபயோகப்படுத்துகிறோம். இவற்றைப் பயன்படுத்தும்போது மிகுந்த கவனத்துடன் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். கரப்பான் பூச்சி மற்றும் கொசுக்களை விரட்ட பயன்படும் ஸ்பிரே வகைகள், கழிவறை சுத்தத்துக்காக உபயோகப்படுத்தப்படும் ஆசிட், பிளீச்சிங் பவுடர் ஆகியவற்றை கதவு மற்றும் ஜன்னல்களைத் திறந்து வைத்துக்கொண்டு அடிப்பதும், தெளிப்பதும் பாதுகாப்பானது.

காற்றோட்டம் இல்லாத இடங்களில் இவற்றைப் பயன்படுத்துவதன் காரணமாக கண் சிவந்து போதல், கண் எரிச்சல் உண்டாகும். தும்மல் வெளிப்படுவதோடு மூக்கடைப்பும் ஏற்படும். தொற்று காரணமாக தொண்டையில் அடைப்பு உண்டாகும். நுரையீரலில் சளி உற்பத்தி ஆகும். சுவாச பிரச்னை ஏற்படும். சிலருக்கு நுரையீரலில் தண்ணீர் சேரும். இதன் காரணமாக, அவர்களுக்கு நுரையீரல் வீக்கம் (Pulmonary Edema) ஏற்படும். கை, கால்களில் ஆசிட் பட்டுவிட்டால், சருமம் வெந்து புண்ணாவதற்கு வாய்ப்பு உள்ளது.

சமையல் அறையில் கரப்பான் பூச்சி, கொசுக்களை விரட்டுவதற்கான ஸ்பிரே உபயோகப்படுத்தும்போதும், நீக்க முடியாத கறைகளை அகற்றுவதற்காக ஆசிட் பயன்படுத்தும் நேரங்களிலும் மறக்காமல் அடுப்பை அணைத்துவிட வேண்டும். அப்படிச் செய்யாமல், கவனக்குறைவாக இருந்தால் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஸ்பிரே தெளிப்பதற்கு முன் ஏ.சி.யை நிறுத்திவிட வேண்டும். அப்படி செய்யாத பட்சத்தில், காற்று சுழற்சி காரணமாக ஸ்பிரே நெடி அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கும். இந்த நெடி நுரையீரலுக்குள் சென்று சுவாச பிரச்னைகளை உருவாக்கும்.

கழிவறை மற்றும் குளியல் அறையை சுத்தம் செய்வதற்காக ஆசிட் பயன்படுத்துவது வாடிக்கையாக இருக்கிறது. இதிலுள்ள எரிபொருளில் (Fuel) இருந்து வெளிப்படும் புகை மிகவும் ஆபத்தானது. இந்தப் புகை எரிச்சலை உண்டாக்குவதோடு, பார்வைக் குறைபாட்டையும் உண்டாக்கக் கூடியது. இந்தப் பூச்சிவிரட்டிகள் மற்றும் கிருமிநாசினிகளைக் குழந்தைகளை அருகில் வைத்துக்கொண்டு பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

ஏனென்றால், குழந்தைகளின் எடை குறைவாக இருக்கும். இதன் காரணமாக அவர்களுக்கு சுவாசக் கோளாறு வரக் கூடும். பலர் ஸ்பிரே வகைகள், ஆசிட் மற்றும் பிளீச்சிங் பவுடரை முகத்துக்கு அருகில் வைத்துக்கொண்டும், கண்ணில் படுமாறும் தெளிப்பார்கள். இவற்றை உபயோகப்படுத்தும் நேரங்களில் முகத்தில் துணி கட்டிக்கொள்ள வேண்டும். கையுறைகள் பயன்படுத்துவது பாதுகாப்பானது…’’

Leave a Reply