ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திற்கு மீண்டும் கொலை மிரட்டல். பெரும் பரபரப்பு
பலகோடி ரூபாய் ஊழல் நடந்ததாக கூறப்படும் கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரணை செய்து வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் அவர்களுக்கு ஏற்கனவே பலமுறை கொலைமிரட்டல் வந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் கொலை மிரட்டல் வந்துள்ளது. மேலும் சகாயம் விசாரணை செய்து வைத்துள்ள ஆவணங்கள் அனைத்தையும் எரித்துவிடுவோம் என்றும் மர்ம நபர்கள் எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதில் பலகோடி ரூபாய் ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டினை அடுத்து சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள் கடந்த டிசம்பர் மாதம் முதல் விசாரணை செய்து வருகிறார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே அவருக்கு அலுவலகம் ஒதுக்கப்பட்டது. இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்களாக கருதப்படும் தொழிலதிபர்கள், அதிகாரிகள் உள்பட பலருக்கு சம்மன் அனுப்பி சகாயம் அவர்கள் விசாரணை செய்து அறிக்கை தயாரித்து வருகிறார். வரும் 15ஆம் தேதி தனது இறுதி விசாரணை அறிக்கையில் சென்னை ஐகோர்ட்டில் அவர் சமர்ப்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று மதுரை மாநகர போலீஸ் அலுவலகத்தில் உள்ள நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு வந்தது. அதில் சகாயம் தயாரித்த அறிக்கை மற்றும் ஆவணங்களை எரித்துவிடுவோம் என மிரட்டல் வந்ததாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த மிரட்டலை தொடர்ந்து சகாயம் அவர்களுக்கும் அவருடைய அலுவலகத்திற்கும் பாதுகாப்பு பலப்படுத்டப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.