பிரதமரின் ஒருவருட வெளிநாட்டு செலவு ரூ.37 கோடி. தகவல் அறியும் ஆணையம் தகவல்
சிறுவயதில் கஷ்டப்பட்டவர், டீக்கடை வைத்திருந்து படிப்படியாக உயர்ந்து வந்தவர், எளிமையானவர் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட பாரத பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயண செலவு ஆண்டு ஒன்றுக்கு ரூ.37 கோடி என்று தகவல் வெளியாகி உள்ளது.
நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்ற பின்னர் உலகின் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வெளிநாடுகளில் முதலீட்டை திரட்டுவது, தொழில் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது உள்பட பல முக்கிய பணிகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரையிலான ஒருவருட காலத்தில் அவர் பூடான், நேபாளம், தென்கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, பிஜி, இலங்கை, சீனா, ஆஸ்திரேலியா, கனடா, வங்காள தேசம், சிங்கப்பூர் உள்பட 20 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், பிரதமரின் பயணச் செலவு குறித்து சமூக ஆர்வலர் லோகேஷ் பத்ரா என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரம் கேட்டதில் அவருக்கு அளிக்கப்பட்டுள்ள பதிலில் கீழ்க்கண்ட தகவல்கள் அவருக்கு கூறப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் பிரதமரின் வெளிநாட்டு பயண செலவாக ரூ.37.22 கோடி செலவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு சென்ற வகையில் அதிகபட்சமாக ரூ.8.91 கோடியும், ஜெர்மனி, பிஜி, சீன நாடுகளுக்கு அவர் சென்ற வகையில் செலவு முறையே ரூ.2.92 கோடி, ரூ.2.59 கோடி, ரூ.2.34 கோடி ஆகும்.
பூடானுக்கு சென்ற போது தான் மிக குறைந்த அளவில் ரூ.41.33 லட்சம் மட்டுமே செலவாகி உள்ளது. ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடி ஓட்டலில் தங்கி இருந்ததற்கான செலவு ரூ.5.60 கோடியாகும். அவருடன் சென்றவர்களின் கார் பயணத்துக்கு ரூ.2.40 கோடி வாடகையாக செலுத்தப்பட்டுள்ளது. நியூயார்க்கில் பிரதமரின் பாதுகாப்பு படையினர் தங்கியிருந்த நியூயார்க் பேலஸ் ஓட்டல் வாடகை ரூ.9.16 லட்சம். பிரதமரின் ஓட்டல் அறை வாடகை ரூ.11.51 லட்சம். அங்கு பாதுகாப்பு படையினருக்கான கார் வாடகையாக ரூ.39 லட்சமும், தூர்தர்ஷன் குழுவினர் பிரதமரின் சுற்றுப்பயணம் குறித்து செய்தி சேகரிக்க ரூ.3 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது.
சீனாவில் ஓட்டலில் தங்கி இருந்ததற்கான செலவு ரூ.1.06 கோடி, வாகனங்களுக்கான வாடகை ரூ.60.88 லட்சம், விமான செலவு ரூ.5.90 லட்சம், அதிகாரிகளுக்கான தின பயண செலவு ரூ.9.80 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. இதேபோல், வங்காளசேத்துக்கான பயண செலவு ரூ.1.35 கோடி. அதில் ஓட்டலில் தங்கியதற்கான வாடகை ரூ.19.35 லட்சம். மொழி பெயர்ப்பாளர்களுக்கான செலவு ரூ.28.55 லட்சம், பிரதமரின் இன்டர்நெட் செலவு ரூ.13.83 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.