சிரியா அகதிகளுக்காக சொந்தமாக தீவு வாங்கும் எகிப்து கோடீஸ்வரர். அய்லான் பெயர் வைக்க முடிவு

சிரியா அகதிகளுக்காக சொந்தமாக தீவு வாங்கும் எகிப்து கோடீஸ்வரர். அய்லான் பெயர் வைக்க முடிவு
egypt
சமீபத்தில் சிரியாவில் இருந்து அகதியாய் சென்ற அய்லான் என்ற சிறுவன் கடலில் மூழ்கி மரணம் அடைந்து அந்த சிறுவனின் உடல் கரையில் ஒதுங்கிய அதிர்ச்சி புகைப்படம் உலகையே உலுக்கிவிட்டது. அகதிகளை ஏற்க மறுத்த ஐரோப்பிய நாடுகள் இந்த ஒரே புகைப்படத்தால் தங்கள் நிலையை மாற்றிக்கொண்டு அகதிகளுக்கு ஆதரவுக்கரம் அளிக்க முன்வந்துள்ளது. இந்நிலையில் எகிப்து நாட்டின் கோடீஸ்வரர் ஒருவர் தான் வாங்கவுள்ள தீவு ஒன்றிற்கு மரணமடைந்த சிறுவன் அய்லான் பெயரை வைக்க முடிவு செய்துள்ளார். இந்த தீவு உள்ளவரை அய்லானின் பெயர் உலக வரைபடத்தில் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

எகிப்து நாட்டை சேர்ந்த நகுய்ப் சாகுரிஸ் என்ற கோடிஸ்வரர் அகதிகளின் மறுவாழ்வுக்கென்றே தன்னுடைய சொந்த பணத்தில் ஒரு தீவை வாங்க முன்வந்துள்ளார். கிரீஸ் அல்லது இத்தாலியில் ஒரு தீவை விலைக்கு வாங்கி அதில் சிரியா அகதிகளை குடியேற்ற அவர் திட்டமிட்டுள்ளார். இதற்கு கிரீஸ் அல்லது இத்தாலி நாடுகள் தனக்கு ஒரு தீவை விலைக்கு விற்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தான் விலைக்கு வாங்கும் அந்த தீவில் அகதிகள் தங்க வீடுகள் மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்கி தரவும் முடிவு செய்துள்ளார். அகதிகளுக்காக அவர் வாங்கவுள்ள தீவுக்கு பலியான 3 வயது சிறுவன் அய்லானின் பெயரை சூட்ட இத்தாலிய கோடீஸ்வரர் நகுய்ப் சாகுரிஸ் தீர்மானித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: அகதிகளுக்காக நான் வாங்கும் தீவுக்கு சமீபத்தில் அகதியாக புகலிடம் தேடி துருக்கி நாட்டு கடலில் மூழ்கி கரை ஒதுங்கிய சிறுவனின் நினைவாக ‘அய்லான் தீவு’ என பெயரிட முடிவு செய்துள்ளேன். அந்த தீவு எங்கே உள்ளது? என்பதை இனிதான் நான் தேட வேண்டும். (“I found a name for the Island ‘ILAN’ [sic] the young Syrian child thrown on Turkish shore by the sea to remind us! Now I need to find the island!”) என தனது டுவிட்டர் பக்கத்தில் நகுய்ப் குறிப்பிட்டுள்ளார். எகிப்து நாட்டில் பிரபல தொலைத்தொடர்பு நிறுவன அதிபராக இருக்கும் இவரது சொத்து மதிப்பு சுமார் 300 கோடி அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply