சென்னை மெட்ரோ ரயிலில் சுற்றுலா அட்டை. நாள் முழுவதும் பயணம் செய்ய ரூ.100 மட்டுமே
கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி தமிழக முதல்வரால் ஆரம்பிக்கப்பட்ட கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான சென்னை மெட்ரோ ரயில் சேவை திட்டம் ஆரம்பத்தில் பொதுமக்களை கவர்ந்தாலும், குறுகிய தூரத்தில் மட்டும் இயங்குவதாலும், கட்டணம் அதிகம் என்ற கருத்து கூறப்படுவதாலும் போதிய வரவேற்பு இல்லாமல் உள்ளது. இந்நிலையில் மேலும் பயணிகளை கவர புதிய திட்டங்களை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து வருகிறது.
பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கிலும், வருமானத்தை பெருக்கும் நோக்கிலும் கடந்த 1 ஆம் தேதி முதல் 20 சதவீத கட்டண சலுகையுடன் 3 வகையான பயண அட்டைகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதற்கு பயணிகளிடம் ஓரளவு வரவேற்பு கிடைத்ததை அடுத்து தற்போது, சென்னை வரும் சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் கவரும் வகையில், சுற்றுலா பயண அட்டையை (டூரிஸ்ட் கார்டு) நேற்று முதல் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.
இந்த சுற்றுலா பயண அட்டையை பெற ரூ.150 செலுத்த வேண்டும். இதில், ரூ.100 பயண கட்டணமாகவும், ரூ.50 திருப்பித்தரத்தக்க முன்பணமாகவும் எடுத்துக்கொள்ளப்படும். சுற்றுலா பயண அட்டை மூலம் மெட்ரோ ரயிலில் ஒரு நாளில், ஒருவர் பல முறை பயணம் செய்யலாம். பயணம் செய்யும் அந்த ஒரு நாள் மட்டுமே இந்த அட்டை செல்லும். சுற்றுலா பயண அட்டை வாங்கிய நாளில் இருந்து 30 நாட்களுக்குள் எந்த நாளில் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.