கல்வியில் இந்துத்துவா திணிப்பா? கி.வீரமணி குற்றச்சாட்டு
கல்வி ஆணையம் என்ற புதிய ஆணையத்தை உருவாக்கி அதன்மூலம் கல்வித் துறையில் இந்துத்துவத்தை திணிக்க நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு திட்டமிடுவதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ”தேர்தல் ஆணையம் இருப்பதுபோல கல்வி ஆணையம் என்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என ஆர்எஸ்எஸ் சிந்தனையாளரும், மத்திய கல்வித் துறைக்கு ஆலோசனை வழங்கும் கமிட்டி உறுப்பினருமான தினேஷ் பாத்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
மேலெழுந்தவாரியாக பார்க்கும்போது இது நல்ல யோசனையாகவே தெரியும். ஆனால், இதில் மிகப்பெரிய ஆபத்து மறைந்துள்ளது. இந்த ஆலோசனையை வழங்கியிருக்கும் தினேஷ் பாத்ரா, ‘இந்திய கல்விக் கொள்கையில் இடதுசாரிகளின் செல்வாக்கு அதிகமாக உள்ளது. பாடநூல்களில் களையெடுக்கப்பட வேண்டிய பல அம்சங்கள் உள்ளன’ என கருத்து தெரிவித்துள்ளார்.
கல்வியில் இந்துத்துவத்தை திணிக்கும் நோக்கத்துடனே கல்வி ஆணையம் அமைக்க வேண்டும் என அவர் யோசனை தெரிவித்துள்ளார். எனவே, குலக்கல்வி திட்டத்துக்கு எதிராக தமிழகம் கிளர்ந்தெழுந்ததுபோல இந்துத்துவத்தை திணிக்கும் திட்டத்தையும் எதிர்த்து போராட வேண்டும். இந்த விஷயத்தில் கல்வியாளர்களும், பெற்றோர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்”
இவ்வாறு கீ.வீரமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்