‘ரஜினி முருகன்’ படத்திற்கு திடீர் பிரச்சனையா? சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதிர்ச்சி
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பொன்ராம் இயக்கியுள்ள ‘ரஜினி முருகன்’ திரைப்படம் வரும் 17ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி தரும் செய்தி வெளிவந்துள்ளது.
இந்த படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமி தயாரித்த ‘உத்தம வில்லன்’ உள்பட ஒருசில படங்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் இன்னும் முடிவில்லை என்று கூறப்படுகிறது. இந்த பிரச்சனை குறித்து பேசுவதற்காக நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் சுமூக முடிவு காணப்படவில்லை என்றும் அதன் காரணமாக இந்த படம் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாகவும் உறுதிப்படுத்தாத தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதே நேரத்தில் ‘ரஜினி முருகன்’ படத்திற்காக புக் செய்யப்பட்ட தியேட்டர்கள் அவசர அவசரமாக மற்றொரு முன்னணி நடிகரின் படத்திற்கு கைமாறி வருவதாகவும் கூறப்படுகிறது. கோவையில் பிரபல விநியோகிஸ்தர் ஒருவர் ‘ரஜினிமுருகன்’ படத்திற்காக புக் செய்த தியேட்டர்களை ‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ படத்திற்கு கைமாற்றிவிட்டதாக கூறப்படுகிறது.
இதே நிலைமை மற்ற நகரங்களில் ஏற்பட இருப்பதாகவும், இதன் காரணமாக ‘ரஜினிமுருகன்’ படத்திற்கு கடைசி நேரத்தில் சிக்கல் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் பிரச்சனையை சுமூகமாக பேசி, இந்த படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.