ரூ.25 லட்சத்தில் பாரம்பரிய சின்னங்கள் பராமரிப்பு!

LRG_20150911105635055558

தொல்லியல் துறைக்கு உட்பட்ட பகுதிகளில், 25 லட்சம் ரூபாய் மதிப்பில், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள, தொல்லியல் துறை முடிவெடுத்து உள்ளது. கடந்த, 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில், மாமல்லபுரம் அடுத்த, சாலவான்குப்பம் கிராமத்தில் உள்ள புலிக்குகை வளாகத்தில், மணல்மேடு அரிக்கப்பட்டது. அப்போது அந்த வளாகத்தில், புதையுண்டிருந்த, 2,000 ஆண்டுகள் பழமையான முருகன் கோவில் வெளிப்பட்டது. தொல்லியல் துறையினர், அந்த பகுதியில் அகழாய்வு நடத்தி, தரைமட்டத்தின் கீழ், இடிந்த நிலையில் புதையுண்டிருந்த கோவிலை, முழுமையாக வெளிப்படுத்தி, பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவித்தனர். இந்த நிலையில், 10 ஆண்டுகளாக, வளாகத்தில் போதிய பாதுகாப்பு வசதி செய்யப்படாததால், சமூக விரோதிகளால், கோவில் சுவர் உடைக்கப்பட்டது. இதையடுத்து அங்கு, 8.82 லட்சம் ரூபாய் மதிப்பில், சுற்றுச்சுவர் அமைத்து, அதன்மேல் இரும்பு தடுப்பு அமைக்க, தொல்லியல் துறை முடிவெடுத்து உள்ளது.

அதேபோல், 8.16 லட்சம் ரூபாய் மதிப்பில், காஞ்சிபுரம் அடுத்த, நாட்டேரி, சந்திரமவுலீஸ்வரர் கோவில்; 6.35 லட்சம் ரூபாய் மதிப்பில், பழவேற்காடு டச்சு கல்லறை பகுதி; 1.71 லட்சம் ரூபாய் மதிப்பில், சென்னை, செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகம் ஆகியவற்றில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள, தொல்லியல் துறை ஒப்பந்த அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

Leave a Reply