திப்பு சுல்தான் வேடத்தில் ரஜினி நடிக்கக்கூடாது. இராம கோபாலன் எதிர்ப்பு

திப்பு சுல்தான் வேடத்தில் ரஜினி நடிக்கக்கூடாது. இராம கோபாலன் எதிர்ப்பு
tipu
சமீபத்தில் திப்புசுல்தான் வரலாற்று கதையில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. திப்புசுல்தானின் வாழ்க்கையில் நடந்த விறுவிறுப்பான சம்பவங்கள் அடங்கிய கதையில் சூப்பர் ஸ்டார் நடித்தால் மிகச்சிறப்பாக இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் திடீரென ரஜினிக்கு இந்துமுன்னணி ராமகோபாலன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த தொழில் அதிபர் அசோக்கெனி என்பவர்  திப்பு சுல்தானின் வாழ்க்கை வரலாற்றை சினிமா படமாக தயாரிக்க முடிவு செய்து  திப்பு சுல்தான் வேடத்தில் நடிகர் ரஜினிகாந்தை நடிக்க வைக்க அவர் முயற்சி செய்து வருகிறார். இந்த படம் குறித்த பேச்சுவார்த்தை ஆரம்ப நிலையில்தான் உள்ளது. ஆனால் அதற்குள் இந்த முயற்சிக்கு எதிர்ப்பு கிளம்பிவிட்டது. திப்புசுல் தான் வேடத்தில் ரஜினி நடிக்க கூடாது என்று இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் கூறுகையில்,

” திப்புசுல்தான் வேடத்தில் தமிழ் நடிகர்கள் நடிப்பது தமிழர்களை அவமானப்படுத்துவதற்கு சமம். திப்பு சுல்தான் தமிழர்களுக்கும் குறிப்பாக இந்துக்களுக்கு எதிராக நடத்திய தாக்குதல்கள் பற்றி பல வரலாற்று புத்தகங்களில் இருந்து அடையாளம் காட்ட முடியும்.

தமிழர்களை துரத்தியடித்த திப்புசுல்தானை சிறந்த சுதந்திர போராட்ட தியாகியாக சித்தரிப்பதற்கான முயற்சிதான் இந்த படத்தயாரிப்பு. முன்னாள் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆரின் மூதாதையர்கள் கொங்கு நாட்டில் உள்ள பொள்ளாச்சியைச்  சேர்ந்தவர்கள். அந்தப்  பகுதி மைசூர் சமஸ்தானத்தில் ஐதர் அலி ஆளுகையில் இருந்த போது இந்துக்களை மதம் மாறும்படி கட்டாயப் படுத்தினார்கள். மதம் மாற விருப்பம் இல்லாதவர்கள் அங்கிருந்து பாலக்காட்டுக்குக்  குடிபெயர்ந்தனர். அவ்வாறு குடி பெயர்ந்தவர்களில் எம்.ஜி.ஆரின் மூதாதையர்களும் அடங்குவர். எனவே எனது வேண்டுகோள் தமிழையும், தமிழரையும் நேசிப்பவர்கள் யாரும் திப்பு சுல்தான் வேடத்தில் நடிக்க கூடாது. அந்தப்  படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply