2006-மும்பை தொடர் வெடிகுண்டு வழக்கில் தீர்ப்பு. 12 பேர் குற்றவாளிகள் என அறிவிப்பு

2006-மும்பை தொடர் வெடிகுண்டு வழக்கில் தீர்ப்பு. 12 பேர் குற்றவாளிகள் என அறிவிப்பு
mumbai
கடந்த 2006ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த ரயில் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 12 பேர் குற்றவாளிகள் என்றும், ஒருவர் நிரபராதி என்று மகாராஷ்டிர மாநில திட்டமிட்ட குற்றச்செயல்கள் தடுப்புக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒய்.டி. ஷிண்டே தீர்ப்பு அளித்துள்ளார். குற்றவாளிகளுக்கான தண்டனையை நிர்ணயம் செய்வதற்கான வாதம் வரும் திங்கள் அன்று தொடங்க உள்ளது

கடந்த 2006ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி மும்பை புறநகர் ரயில்களின் முதலாம் வகுப்பு பெட்டிகளில் 7 ஆர்டிஎக்ஸ் குண்டுகள் அடுத்தடுத்த வெடித்தன. இதில் 188 பேர் உயிரிழந்தனர். 829 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் 14 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.

குண்டு வெடிப்பு தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. 8 ஆண்டுகளாக நடைபெற்ற வந்து வழக்கில் 192 பேர் சாட்சியம் அளித்தனர். இதில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள், 5 ஐஏஎஸ் அதிகாரிகள், 18 மருத்துவர்களும் அடங்குவர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விசாரணை நிறைவுற்ற நிலையில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், 12 பேர் குற்றவாளி என அறிவித்ததோடு, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அப்துல் வாஹித் சாகிப் என்பவரை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் குற்றவாளிகளுக்கான  தண்டனை விவரம் வரும் 14ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் குண்டுவெடிப்பில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 189 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply