ஆம்புலன்ஸ் ஊழல் விவகாரம்: கார்த்திக் சிதம்பரம் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு

ஆம்புலன்ஸ் ஊழல் விவகாரம்: கார்த்திக் சிதம்பரம் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு
ambulance
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக ஆம்புலன்ஸ் ஊழல் விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்து வருவதை அடுத்து இதுதொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் மகன் கார்த்திக் சிதம்பரம் உள்பட 5 பேர் மீது மத்திய அமலாக்கப் பிரிவு இயக்குனரகம் வழக்கு பதிவு செய்துள்ளதால் காங்கிரஸ் கட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 2010 முதல் 2013 ஆம் ஆண்டுவரை மாநிலம் முழுவதும் ஆம்புலன்ஸ் சேவை வழங்குவதற்காக ஜிகித்ஸா சுகாதார நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டதிலும், திட்டத்தை செயல்படுத்தியதிலும், பில்களுக்கு பணம் வழங்கியதிலும் பெருமளவு ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி பொறுப்பேற்றதை அடுத்து இந்த ஊழல் தொடர்பாக ஜெய்ப்பூர் மேயர் பங்கஜ் ஜோஷி புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அதில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், ஜிகித்ஸா சுகாதார நிறுவனத்தின் இயக்குனர்கள் என கூறப்படும் முன்னாள் மத்திய அமைச்சர் சச்சின் பைலட், கார்த்தி சிதம்பரம், முன்னாள் மத்திய அமைச்சர் வயலார் ரவியின் மகன் ரவிகிருஷ்ணா, சுவேதா மங்கல், மாநில முன்னாள் சுகாதார அமைச்சர் துரு மிஸ்ரா ஆகியோர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் அசோக் கெலாட், சச்சின் பைலட், கார்த்தி சிதம்பரம், ரவி கிருஷ்ணா உள்ளிட்டவர்கள் மீது சட்டவிரோத பணபரிவர்த்தனை தடை சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரக அதிகாரிகள் கூறும்போது, ”நாங்கள் நடத்துகிற விசாரணையில் ராஜஸ்தான் ஆம்புலன்ஸ் ஊழலில் பலன் அடைந்தவர்கள் யார், யார் என்பதை அடையாளம் காண்போம். தற்போது, குற்றஞ்சாட்டப்படவர்களுக்கு சம்மன் அனுப்பப்படுகிறது” என்றனர்.

Leave a Reply