நாய்களை சுட்டு கொல்ல அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட சீன மாவட்ட நிர்வாகம்.
சீனா நாட்டில் உள்ள ஒரு மாவட்டம் நாய்களை வளர்க்க தடை விதித்துள்ளது. குறிப்பிட்ட நாட்களுக்கு பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் நாய்களை மாவட்டத்தை விட்டு வெளியேற்றுமாறும் இல்லாவிட்டால் சுட்டுத்தள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. இதனால் அந்த பகுதியில் செல்ல நாய்களை வளர்த்து வரும் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கிழக்கு சீனாவில் உள்ள ஷான்டாங் என்ற மாகாணத்தில் டேயாங் மாவட்டம் என்ற மாவட்டம் உள்ளது. இந்த மாவட்ட நிர்வாகம், குடியிருப்போரின் நலன் கருதியும், சுகாதாரத்தை பேணும் வகையிலும் வளர்ப்பு நாய்களை வளர்க்க தடை விதித்துள்ளது. அனைத்து நாய்களையும் உடனே அகற்ற வேண்டும் என்றும் அவ்வாறு அகற்றாவிட்டால் அதிகாரிகள் உங்கள் வீட்டிற்கு வந்து உங்கள் நாய்களை சுட்டு கொல்வார்கள் என்று அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
வெறிபிடித்த தெருநாய்களின் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், வீட்டில் வளர்க்கப்படும் நாய்களையும் ஏன் வெளியேற்ற சொன்னார்கள் என்பது தெரியவில்லை என்று மாவட்ட அதிகாரி ஒருவர் கூறினார்.
மாவட்ட நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு விலங்குகள் பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த தடை தொடர்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், இந்த நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவும் அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர்.