அமெரிக்கா: இரட்டை சகோதரிகளுக்கு பிறக்கும் 2-வது இரட்டை குழந்தைகள்
அமெரிக்காவில் உள்ள உட்டாஹ் என்ற நகரில் வாழ்ந்து வரும் இரட்டை சகோதரிகளுக்கு இரண்டாவது முறையாக இரட்டை குழந்தை பிறக்கவுள்ளது. இதுபோன்ற அதிசய நிகழ்வுகள் உலகில் மிக அரிதாகவே நடைபெறும் என கூறப்படுகிறது.
கெர்ரி பங்கர் மற்றும் கெல்லி வால் என்னும் அமெரிக்காவை சேர்ந்த இரட்டை சகோதரிகள் பலவிதங்களில் ஒற்றுமையாக உள்ளனர். இருவரும் தங்களுடைய நெருங்கிய நண்பர்களை திருமணம் செய்தனர். இருவருக்குமே இரட்டைக்குழந்தைகள் கடந்த சில வருடங்களுக்கு முன் பிறந்தன. இருவரின் இரட்டை குழந்தைகளும் மூன்று மற்றும் நான்கு வயதில் உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் இருவருமே மீண்டும் கர்ப்பமானார்கள்.
ஐந்துமாத கர்ப்பிணிகளாக இருக்கும் இந்த இரட்டை சகோதரிகள் சமீபத்தில் மருத்துவமனை சென்று வயிற்றில் உள்ள குழந்தைகளை ஸ்கேன் எடுத்து பார்த்தபோது இருவரின் வயிற்றிலும் மீண்டும் இரட்டைக்குழந்தைகள் வளர்ந்து வருவதை கண்டு இன்ப அதிர்ச்சியுற்றனர். ஒரு இரட்டை சகோதரிகளுக்கு இருமுறை இரட்டை குழந்தைகள் பிறப்பது என்பது அபூர்வமாக நடைபெறும் நிகழ்வு என அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருவருக்கும் வரும் டிசம்பர் மாதம் குழந்தைகள் பிறக்கும் என மருத்துவர்கள் தேதி குறித்துள்ளனர்.