ராஜஸ்தானில் பக்ரீத் விடுமுறை ரத்து? சர்ச்சையை கிளப்பிய புதிய உத்தரவு
பாரதிய ஜனத கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெறும் ராஜஸ்தான் மாநிலத்தில் இஸ்லாமியர்களின் புனித நாளாகிய பக்ரீத் பண்டிகை நாளின் விடுமுறையை ரத்து செய்யப்பட்டதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜெயின் சமூகத்தினர்களின் பண்டிகைக்காக ஒருசில வட மாநிலங்களில் இறைச்சிக்கு தடை விதித்துள்ள நிலையில் தற்போது திடீரென இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகைக்கு விடுமுறை அளிக்க வேண்டாம் என்ற ராஜஸ்தான் அரசு பிறப்பித்த உத்தரவு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகை நாட்களில் ஒன்றஆன பக்ரீத் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆனால் அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டாம் என ராஜஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. பக்ரீத் கொண்டாடப்படும் அதே செப்டம்பர் 25-ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்த தலைவர் தீன் தயாள் உபாத்யாய் அவர்களின் பிறந்த நாள் வருவதால் அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளை திறந்து வைத்து ரத்த தானம் முகாம்களை நடத்துமாறு அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அதே சமயம் விருப்பப்பட்டால் இஸ்லாமிய ஆசிரியர்கள் விடுப்பு எடுத்து கொள்ளலாம் என்றும் ராஜஸ்தான் அரசு கூறியுள்ளது.
பக்ரீத்திற்கு விடுமுறை இல்லை என்ற அரசின் உத்தரவிற்கு கண்டனம் தெரிவித்துள்ள இஸ்லாமிய அமைப்புகள், இது அரசியலமைப்புக்கு எதிரானது என்று குற்றம்சாட்டியுள்ளது.
ஏற்கனவே சூரிய நமஸ்காரம், யோகா பயிற்சி ஆகியவற்றை அரசு பள்ளிகளில் கட்டாயமாக்கியுள்ள ராஜஸ்தான் அரசு, இப்போது பக்ரீத் விடுமுறையையும் ரத்து செய்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.