நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி. ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் பதவி இழந்தார்
ஆஸ்திரேலிய நாட்டின் ஆளும் கட்சியான லிபரல் கட்சி இன்று நடத்திய நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால், அதற்கு பொறுப்பேற்று தற்போதைய பிரதமரான டோனி அபாட் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் கடந்த சில மாதங்களாக பிரதமர் டோனி அபாட்டிற்கு எதிரான அரசியல் சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் அரசின் உறுதித்தன்மையை நிரூபிக்க எதிர்க்கட்சிகளின் வேண்டுகோளை ஏற்று இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை பிரதமர் டோனி அபாட் நடத்தினார். கேன்பரா நகரில் நடைப்பெற்ற இந்த வாக்கெடுப்பில் பிரதமர் டோனி அபாட்டிற்கு ஆதரவாக 44 வாக்குகளும், அவரது நீண்டகால எதிர்ப்பாளரான மால்கம் டர்ன்புல்லிற்கு 54 வாக்குகளும் கிடைத்துள்ளன.
பிரதமர் டோனி அபாட் தனது பெரும்பான்மையை நிரூபிக்க தவறியதால் அவர் பதவியை இழந்ததாக அறிவிக்கப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பின் தோல்விக்கு முழு பொறுப்பேற்று தன்னுடைய பதவியை அவர் இன்று அல்லது நாளை ராஜினாமா செய்யவுள்ளார். அவருடைய ராஜினாமா கடிதம் கிடைத்ததும், மால்கம் டர்ன்புல் புதிய பிரதமராக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் கடந்த 8 ஆண்டுகளில் 5 பிரதமரை தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.