ஜெயலலிதாவும் கருணாநிதியும் தேவையில்லை. 2016-ல் தேமுதிக ஆட்சி. விஜயகாந்த்
கோவையில் தே.மு.தி.க.வின் 11 ஆம் ஆண்டு துவக்க விழா, விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி வறுமை ஒழிப்பு தின விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில், நீண்ட நாட்களாக கட்சியில் பணியாற்றிய, நலிவடைந்த தொண்டர்களுக்கு தையல் இயந்திரங்கள், கிரைண்டர், சைக்கிள், ஆட்டோ, வேன் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை கட்சித் தலைவர் விஜயகாந்த் நலத்திட்ட உதவிகளாக வழங்கினார்.
அதன்பின் விஜயகாந்த் பேசும்போது, ”நான் தெய்வத்தையும், மக்களையும் மட்டுமே நம்புகிறேன். அவர்கள் என் பின்னால் இருப்பதால் 2016ல் தே.மு.தி.க. ஆட்சி அமைக்கும். அப்போது, நம்மை எதிர்ப்பவர்கள் எங்கிருப்பார்கள் என்றே தெரியாத நிலை ஏற்படும். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு ரூ.100 கோடி செலவு செய்கிறார்கள். ஆனால், ரேசன் கடையில் உள்தாள் ஒட்டும் நிலையை இவர்களால் மாற்றிவிட முடிந்ததா?
காசு கொடுத்து மக்களை விலைக்கு வாங்க முடியாது. மக்கள் நிச்சயம் பதிலடி கொடுப்பார்கள். தற்போதைய சூழலில் நீதித்துறையின் செயல்பாடுகள் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. 100 முறை நோட்டீஸ் அனுப்பினாலும் அரசிடமிருந்து பதில் வருவதில்லை என உயர் நீதிமன்ற நீதிபதியே கூறுகிறார். மக்கள் நீதித்துறையைத் தான் நம்புகிறார்கள்.
ஜெயலலிதா, கலைஞர் போன்ற ஆட்கள் இந்த ஆட்சிக்கு தேவையில்லை. தேர்தல் கூட்டணிக்காக நாங்கள் யாருக்காகவும் காத்திருக்கவில்லை. யாரை எப்போது கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். 2016ல் எங்கள் கட்சி ஆட்சியைப் பிடிக்கும். அதுதான் அன்றைய தலைப்புச் செய்தியாக அமையும்”’ இவ்வாறு விஜயகாந்த் பேசினார்