எனக்கு திமிரும் கொழுப்பும் அதிகம். பெரியார் விழாவில் குஷ்பு பேச்சு

எனக்கு திமிரும் கொழுப்பும் அதிகம். பெரியார் விழாவில் குஷ்பு பேச்சு

kushbooதந்தை பெரியார் பிறந்த நாளை அடுத்து நேற்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அவருடைய பிறந்த நாள் விழா அனுசரிக்கப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, திராவிடர் கழக பொதுச்செயலாளர் கீ.வீரமணி உள்பட பல தலைவர்கள் பெரியாரின் சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிலையில் சென்னை பெரியார் திடலில் ‘யுனெஸ்கோ’ பார்வையில் தந்தை பெரியார் என்ற தலைப்பில் ‘மகளிர் கருத்தரங்கம்’ நடைபெற்றது. திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு கலந்து கொண்டார்.

இந்த கருத்தரங்கில் குஷ்பு பேசும்போது, ”நான் 29 ஆண்டுகளுக்கு முன், செப்டம்பர் 13 ஆம் தேதி சென்னைக்கு வந்தேன். கடந்துவிட்ட 29 ஆண்டுகளை திரும்பி பார்க்கும்போது பேர், பணம், புகழ் வரும் போகும் என்று தெரிந்தது. சாதித்தது என்ன? என்று திரும்பி பார்க்கும்போது பெரியார் திடலில் நடைபெறும் பெரியார் பிறந்தநாள் விழாவில் இன்று பேசுவதை தான் பெரும் சாதனையாக நினைக்கிறேன்.

பகுத்தறிவு என்றால் என்ன? என்று தெரியாமல் வளர்ந்தவள் நான். மும்பையில் இருந்தபோது யாரும் எனக்கு சொல்லி தரவில்லை. ஆனாலும், மதம், சாதி, இனம் போன்றவற்றில் எனக்கு உடன்பாடு இருந்தது இல்லை. கடவுள் இருக்கிறாரா? என்று எனக்கு தெரியாது. எனது சந்தேகங்களுக்கு யார்? பதில் அளிக்கிறாரோ அவரை நான் கடவுளாக பார்க்கிறேன். எனக்கு 6வது அறிவை கடவுள் தரவில்லை. எனது பெற்றோர் தந்தனர். அவர்களை நான் கடவுளாக நினைக்கிறேன்.

படிப்பு இல்லாதவர்களிடம் தான் துணிச்சல் அதிகம் இருக்கும் என்று வீரமணி இங்கே சொன்னார். நானும் படிக்காதவள் தான். அதனால் தான் என்னிடம் துணிச்சல் அதிகம் இருக்கிறது. இன்றைய பெண்கள் சில நேரங்களில் சமுதாயத்துக்கு பயந்து துணிச்சலை வெளிகாட்டுவது இல்லை.பெரியாருக்கும், எனக்கும் சம்பந்தம் இருக்கிறது. எங்கோ பிறந்து, வளர்ந்தாலும், என்னுடைய சிந்தனையில் பெரியாரின் கொள்கைகள் இருந்துள்ளது. நான் ஒரு பெரியார்வாதி. எனவே என்னிடம் திமிரும், கொழுப்பும் அதிகமாகவே இருக்கிறது.

பெண்களுக்கு, சுயமரியாதை வேண்டும் என்று பாடுப்பட்டார் பெரியார். அதனால், பெண்கள் கழுத்தில் தாலி அணியலாமா? அல்லது வேண்டாமா? என்பது அவரவர்களின் விருப்பம். அணிவதும், அணியாமல் இருப்பதும் அவர்களுடைய சுதந்திரம்”

இவ்வாறு குஷ்பு பேசினார்

Leave a Reply